• முன்னுரை

  • கடவுள் வாழ்த்து

  • அறத்துப்பால்
  • பொருட்பால்


    Download PDF
    முகப்பு வாயில்

முன்னுரை

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்பெறுவன அது போலவே, சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று.

பதினெட்டு நூல்களையும் குறிக்கும் வெண்பா வருமாறு.

	"நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்
	பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
	இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
	கைந்நிலைய வாங்கிழ்க் கணக்கு"

முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திகடுகம், ஆசாரக்கோவை,
சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு நூல்களும் நீதியை இயம்புவன.

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும், நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. இரண்டு அடிகளால் திருக்குறள் இயல, நாலடி கொண்டு நடக்கிறது நாலடியார். திருக்குறள், ஒரே ஆசியரால் இயற்றப்பெற்றது. நாலடியார் பல ஆசியர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். பழமொழிகளை அமைத்து முன்றுறையரையனார் பாடிய பாடல்களின் தொகுப்புப் பழமொழி என்னும் நூலாம். ஏனைய நூல்கள் தனித்தனிப் புலவர்களால் பாடப்பெற்றவை.

சமண முனிவர் நானூறு பேர் பாடிய நானூறு வெண்பாக்களைக் கொண்ட நாலடியார், திருக்குறளோடு ஒப்ப வைத்துப் பாராட்டப்பெறும் சிறப்புடையது. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பதனாலும், "பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்" என்பதனாலும் இதன் பெருமையை அறியலாம்.

திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது. சமண மாமுனிவர்கள் அருளிய இவ்வாய நூலினை சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிற்கு உரை எழுதிய ஜைன தத்துவ நூலாசியர் ஸ்ரீபுராணச் செம்மல் பேராசியர் ஜெ. ஸ்ரீசந்திரன், M.A., அவர்கள் உரையுடன் இணையத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Next