முகப்பு வாயில்

 

9. 'நல்லவர் தீயவை நாடார்'

இராகம்: ஜகன்மோகினி தாளம்: ஆதி

பல்லவி
நல்லவர் தீயவை நாடார்
நாடார் தீயவர் நல்லவையே (நல்லவர்)

அனுபல்லவி
தொல்லையும் துயரமும் சூழ்ந்துள தாய்ந்தே
தூயவர் சிற்சில ரேயென உணர்ந்தே (நல்லவர்)

சரணம்
பொல்லா ஐம்பொறி போநெறி புகுவோர்
புகலரும் பிறவிகள் பிறந்திறந் தலைவோர்
எல்லாம் உணர்ந்தான் திருவறம் நின்றே
இனிப்பிற வாநிலை எய்துவ ரென்றே (நல்லவர்)

10. 'புண்ணியம் நாடி வந்தேன்'

இராகம்: சுகாத வினோதினி தாளம்: ஆதி

பல்லவி
புண்ணியம் நாடிவந்தேன்--அருகா நான்
கண்ணியனானேனையா அருகா (புண்)

அனுபல்லவி
எண்ணியவாறெல்லாம் எய்தாத உலகமே
நண்ணியானடைந்து நவிலொணாத்துயரமே (புண்)

சரணம்
அலைகடலில் ஓடுகின்ற அருங்கலங்கடத்துவோர்
அயராது கரைசேர்க்கும் கடமை போன்றறிவோர்
உலகத்துயர்க் கடலில் உழலாத நிலையே
உற்றிட நின்னறம் புணையாக்கியோர்வழியே (புண்)

கண்ணே இமைகாப்பது போன்றப்பா உன்றன்
கலையெலாம் பயின்றே என்றன் கவலை விண்டேன்
பண்கனிந்த இசைபாடிப் பணிந்தேன் போற்றி
பார்முழுதும் உணர்ந்தோய் நின்பாதம்பற்றி (புண்)

11. 'கைலாசபதிநாதா'

இராகம்: சங்கராபுரணம் தாளம்: ஆதி

பல்லவி
கைலாச பதிநாதா நடையிலா ஞானா (கை)


அனுபல்லவி
ஞால மூன்றுமுனர் மேலவானவர் தேவனே
வேதங்கள் நான்கும் விரித்த நான்முகனே (கை)

சரணம்
வானோர் கூடி வெண்சாமரை
வாசை வாசையாக வீசிட
தேனார் மலர்மேல் நடந்தநற் குணனே
தீர்த்தங் கரரே ஜினநாதா (கை)

சரணம்
இணையிலா மெய்ப் பொருள்கள்
ஏற்றமா யுரைத்தும் எம்மை

குணங் கண்டேற்க நற்காட்சி
கூறிய துன் பெருமையோ (கை)

உள்ளத்தைப் பண்படுத்தி
உயிருய்யும் உனதறமே

பள்ளத்தை நோக்கிப் பாயும்
பைம்புனலா யுனைப்பணிந்தேன் (கை)

12. 'காதி அகாதிவினை வென்றவா'

இராகம்: சாரங்கா தாளம்: சாபு

பல்லவி
காதி அகாதி வினை வென்றவா
கடையிலா ஞானக் கருணா மூர்த்தியே
அறிவரா ஜினவரா அமரரும் தொழுதிடும்எம்
ஆனந்த குண மூர்த்தியே (காதி)

அனுபல்லவி
அறிவும் அறமும் ஒன்றாய்
ஆருயிர்க்கு அன்பாய் விளங்கிடவே
நெறியும் நீதியும் எனஉரைத்த
நிமலா அருகா நித்தனே நினைந்தேனே (காதி)

சரணம்
அமரரும் இந்திரரும் வேதகீதம்
அண்டமதிர் முழவமுடன்
தநீஸா தாபாமா ரிகமா ஸ்வர
அந்தர் கான வீணையும்

பாடி ஆடிட அமர்ந்தோனே
சமவசரண கோல நாதனே-சகல
சாத்திர போதனே நீதனே வேதனே
வீரனே தீம் ததீம் துதிபாட (காதி)

13. 'மாசிலா குணமேவியவா'

இராகம்: தோடி தாளம்: ஆதி

பல்லவி
மாசிலா குண மேவியவா
ஓ ஆதி நாதா (மாசி)

அனுபல்லவி
வீசு சாமரம் பொங்கநல்
பூமழை நீழல் அமர் (மாசி)

சரணம்
வாமா ஸ்ரீஜினராஜ நாமா
நற்றவ சீலா
தாமரை மேல் நடந்து
காமனைக் கடிந்த தூயவா,

14. 'அசோகா அரஹந்தனே'

இராகம்: விஜயஸ்ரீ தாளம்: ஆதி

பல்லவி
அசோகா அரஹந்தனே
அறவாழி யேந்திய அறிவரனே (அ)

அனுபல்லவி
அசைவிலாத் தவம் ஆற்றி நின்றனை
அமரேந்திரர் தொழும் அண்ணலாயினை(அ)

சரணம்
மண்பொருள் மாமணி தமை மதித்தே
மதியின்றி மனம் சென்று வினைதின்றதே
எண்வினை வென்றோய்நின் அறம் துணையே
எழுபிறப்பகன்று இன்பம் பெறும் நெறியே (அ)


 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com