முகப்பு வாயில்

 

20. 'மும்மூடங்கள் பற்றிய அறிவுரைகள்'

இராகம்: தேஷ் தாளம்: ஆதி

பல்லவி

போதும் போதும் உங்கள் உறவு-மூடப்
புலிகளே மூவரும் புறப்படல் அறிவு (போ)

அனுபல்லவி

சோதிபோல் விளங்கும் எம்அறிவை-அந்தோ
சூழ்ந்து மடமையில் வீழ்த்தினீர் வாழ்வை (போ)

சரணம்

வாழ்விக்கும் தெய்வமென்றோதி-எங்கள்
வாழ்வினைத் தாழ்வுறச் செய்தீரென்னீதி
கேள்விக்குப் பதில்கூற மாட்டீர்-அறவோர்
கிளத்திய முயற்சியின் பெருமை மறைத்தீர் (போ)

மந்தை மறிபலி மரம்பல தொழுதல்-ஏனை
மாய நெறிகளைப் புகுத்தினீர் பாரில்
சிந்திக்கும் அறிவு அணுவேனுமின்றி-நீர்
செப்பிய மூடத்தில் சென்றனம் குன்றி (போ)

துறவு வேடமதைக் குறைவின்றி புனைந்தே-விதி
துறந்தந்தோ போலி செயல்கள் புரிந்தே
இறைபணி யென்றெங்கும் ஏய்த்திடுவோரை -உயர்
இருடி களாய்ப்போற்ற செய்தீரிப்பாரை (போ)

மக்கள் பலருங்கள் ஆட்சியில் வாழ்ந்தே-மதி
மயங்கிடும் நிலைதனை மாய்த்திட முனைந்தே
திக்காடை யாரெங்கள் பெருமான் விரைவாய் உம்மைத்
தேய்த்திடும் நற்காட்சி தந்தாரே படையாய் (போ)

21. 'அருகர் சிறப்பு'


'ரகுபதி ராகவ' என்ற மெட்டு

அருகன் நாமமே ஆனந்தம்
அருளறமே தரும் ஆனந்தம்

ஒருமொழி யாலறம் உரைத்தவனாம்
ஈரறம் படைத்த இறையவனாம்

மும்மணி அருளிய முனிவோனாம்
நாற்கதி வென்ற நற்றவனாம்

ஐம்பொறி அடக்கிய அறவோனாம்
அறுபொரு ளுரைத்த அறிவோனாம்

எழுபிறப் பகன்ற எம்மானாம்
எண்குண மேவிய ஜினவரனாம்

நலபதம் விளக்கிய நான்முகனாம்
பத்தறம் பகர்ந்த பண்ணவனாம்

இணையிலா அவரடி தொழுவோமே
இகபர சுகம்பெற வழியாமே

குணம்எனும் குன்றேறி நிற்போமே
குவலயம் போற்றிட வாழ்வோமே

நல்லற வமிர்தம் அருந்துவமே
நற்பதம் பெற்று உய்குவமே (அருகன்)

விளக்கம்:-


ஒருமொழி:- அருகப்பெருமான் ஒரு மொழியால் அறம் உரைப்பார். அது எல்லா மொழிகளிலும் விளங்கும்.

ஈரறம்:- இல்லறம், துறவறம்.

மும்மணி:- நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம்.

நாற்கதி:- தேவகதி, மனிதகதி, விலங்குகதி, நரககதி

ஐம்பொறி:- மெய், வாய், கண், மூக்கு, செவி

அறுபொருள்:- உயிர், உயிரல்லவை, தர்மம், அதர்மம், ஆகாயம், காலம்.

எழுபிறப்பு:- மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, பருப்பதம், பாதவம்.

எண்குணம்:- அனந்தஞானம் அனந்த வீரியம், அனந்த தாசனம், அனந்த சுகம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுள் இன்மை, அந்தராயங்களின்மை.

நவபதம்:- ஜீவன், அஜீவன் ஆஸ்ரவம், பந்தம் சம்வரம், நிர்ஜ்ஜரை, மோஷம்,
புண்ணியம், பாவம்.

பத்தறம்:- கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனைநயவாமை, மிகுபொருள் விரும்பாமை, ஊனுண்ணாமை, கள்ளுண்ணாமை, தேனுண்ணாமை,
இரவுண்ணாமை, குரவரை இகழாமை.

22. பகவான் விருஷபதேவர்
வரலாற்றுத்துதிப்பாடல்


இராகம்: யமுனா கல்யாணி தாளம்: ஆதி

1. மக்கள் வாழ்வை மலரச்செய்யும் கற்பகங்கள் மறைந்தன
மன்னுயிர்கள் யாவும் துயரக்கடலிலாழ்ந்தன
திக்கிலாத நிலையில் மக்கள் திகைத்து நின்றனர்.தீய
திசையில் வாழ்வுதிரும்பிய தென்றேக்கங்கொண்டனர்

2. சக்கரம் போல்சுழலும் கால நிலையை எண்ணினர்-சிலர்
சலித்து வாழ்வைத் துணிந்து தீய வழியை நண்ணினர்
இக்கொடுமை நிகழுமென்று இயற்கை உணர்ந்துமே-ஆதி
இறைவனையே தோற்றுவித்த இயல்பைக் கேளுமே
தொகையறா

3. அயோத்தியாண்ட நாபி மருதேவி மகனாரே-இந்த
அவலம் போக்க இடபதேவர் ஆட்சி பெற்றாரே
தயா உள்ளம் கொண்ட மகான் தரையை நோக்கினார்-சிறு
தாமத மிலாது மக்கள் துயரைப் போக்கினார்

4. அரசர் வணிகர் வேளாளராய்ப் பலரை நாட்டினார்-அன்றே
அவரவர்க் குரியதொழில் முறையைக் காட்டினார்
விரைவில் எண் எழுத்திரண்டும் இயற்றிகற்பித்தார்-அறிவு
விளங்கக்கலைகள் இசைகள் யாவும் விரிவாய்ப் போதித்தார்

5. ஆருயிர்கள் யாவும் இன்பம் அடைந்து வாழவே-உயர்
அறமாம் கொல்லா நெறிவகுத்தார் பலரும் ஏற்கவே
சீருசால் மனையறமும் துறவறமுமே-உயிர்
செம்மையுற்று உயருமென்று செப்பினர் தாமே

பாட்டு

6. மாண்பு மிக்க மக்கள் சமுதாயம் கண்டாரே-அவரை
மண்ணும் விண்ணும் போற்றப்பரதநாட்டை ஆண்டாரே
சேண்புகழ வாழ்ந்த மனை வாழ்வை வெறுத்துமே-தாம்
செப்பிய சீர் துறவறத்தில் சிந்தை கொண்டுமே.

7. அருளறம் பிறந்த இந்த அரிய நாட்டையே-ஆள
அருமை மகனாம் பரதனுக்குப் பட்டம் சூட்டியே
கருணை ஆட்சி புரிய மன்னர் கடமை உணர்த்தினார்- அவர்
கருத்தில் கொண்ட தவநெறியைக் கடிதில் பற்றினார்.

8. இட்சுவாகு மன்னர் துறவரசராயினார்-தவம்
இயற்றக் கைலை மலையை நண்ணி அறிவராயினர்
சிக்கல் செய்யும் வினைகள் யாவும்சிதற வீழ்த்தியே-தவச்
செம்மல் விருஷப தேவர் சென்றார் வீடு பற்றியே

9. தலைவர்தம் தலைவருக்கும் தலைவராயினார்-செந்
தாமரை மேல் நடந்து உலகக்குருவுமாயினார்
நிலையிலாத வாழ்வைக் காட்டும் நீலமேகமே-இதை
நினைந்து நிமலன் சீலநெறியில் சென்று வாழ்வமே
 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com