முகப்பு வாயில்

 

23. ஜினர் மலைகள்

இராகம்: ரஞ்சனி தாளம்: ஆதி

பல்லவி
பிறவிப் பிணியறுக்கும் பெருமலைகள்-நம்
பெருந்தல முனிவர்கள் குகைப் பள்ளிகள் (பி)

அனுபல்லவி
அறிவுக்கலை வளர்த்துத் தவம்புரிந்தார்-உயிர்
அனைத்தும் இன்புற்றுவாழும் அறம் உரைத்தார் (பி)

சரணம
நறுந்தென்றல் வீசிவரும் பொதியமலையே-அங்கே
நாதன் நேமிஜினர்சிலை காணும்மலையே
அறவோர் அகத்தியர் ஆண்டமலையே-நம்
அருந்தமிழ் மொழிவளம் பெற்றமலையே (பி)

சித்திரால் திருச்சரணத் தெய்வமலையே-நூறு
ஜினர் சிலை காட்சிதரும் கழுகுமலையே
உத்தமபாளையத்து உயர் மலையே-அருள்
ஓங்கிடும் கொங்கர் புளியங் குளமலையே (பி)

திருப்பரங்குன்றம் திருநாகமலையே-தினம்
தேவர் தொழும் சமணர்மலை ஆனைமலையே
அருங்குன்றம் இருங்குன்றம் ஆந்தைமலையே-உயர்
அணைப்பட்டி கீழவளவு ஐவர் மலையே (பி)

திருஜினப்பள்ளி குன்றக்குடிமலையே-வண்ணச்
சித்திரம் சேர் சித்தண்ண வாசல்மலையே
பெருந்திரு நறுங்கொண்டை திருமலையே-நடனப்
பெருமை விளக்கும் அறச் சாலைமலையே (பி)

குந்த குந்தர் தவம்புரிந்த பொன்னூர்மலையே-பெண்
குலம் கல்வி கற்றப்பள்ளி விடால் மலையே
அந்த மிகு தொண்டூர்மலை ஆண்டிமலையே-வினை
அகற்றும் திருநாதர்க்குன்றம் வெள்ளிமலையே (பி)

சிந்தை அறம் சேரும் சீயமங்கலமலையே-கலைச்
செல்வமெலாமோங்கிய எண்ணாயிரமலையே
அந்தரர் வந்தேகும் திருமூர்த்திமலையே-ஆஹா
ஆறுநாட்டார் குன்றம் மாமண்டூர் மலையே (பி)

வளம்மிகு பஞ்சபர மேட்டிமலையே-திரு
வழுதலங்குன்றமொடு வளத்திமலையே
உளம்மகிழ்வெள்ளாயன் பாறைமலையே-சீலம்
உறைஜின கொண்டா கனகாபுரமலையே (பி)

செந்தமிழ் நாட்டுத் திருஜினர்மலைகள்-உரையால்
செப்புதற்கு இயலாத எண்ணிக்கைகள்
வந்தனை செய்குவோம் வரைகள் நோக்கி-நேரே
வணங்கப் புறப்படுவோம் பயணமாக்கி (பி)

24. நாட்டிலே மிக மேன்மை

இராகம்: ஜோன்புரி தாளம்: ஆதி

நாட்டிலே மிகமேன்மை யாதென்று தேடி-ஓடி
நானலைந்தே னெங்கமொரு பித்தன்போலாடி
கேட்டே நீதிமன்றங்க ளெங்கும்நின்றேன்-அங்கு
கிளத்தினார் சட்டத்தையே விட்டுச் சென்றேன். (நாட்)

ஓதுங் கல்விச்சாலைகளில் நம்பி நுழைந்தேன்-எங்கும்
உரைத்தனர் அறிவென்றே ஒதுங்கி வந்தேன்
தீதுதீ ரறிவுடை யாரிடங் கேட்டேன்-அவர்
தீரமாய்ச் சத்திய மென்றார் திரும்பிவிட்டேன். (நாட்)

அறிவிலா னெதிர்பட்டான் குறை அறைந்தேன்-அவன்
ஆடிக்களி யாட்டமென்றானகம் முறிந்தேன்
சிறந்தமே ரழகிளம் மாதைக் கண்டேன்-புன்
சிரிப்புடன் காதல் என்றாள் வெட்கங்கொண்டேன். (நாட்)

ஆண்மையோ டுலா விவருங் காளையைக்கண்டேன்-அவன்
அழகு அழகு என்றான் அங்கம் வியர்த்தேன்
தூண்போல் தோளுடை படைவீரனைக் கேட்டேன்-அவன்
துணிந்துநல் வெற்றி யென்றான் துன்பங்கொண்டேன்.(நாட்)

அரசியல் அறிஞரை அணுகிக் கேட்டேன்-அவர்
ஆழ்ந்து சமதர்மம் என்றார் அயர்ந்து நின்றேன்
விரைவில் தெளிந்துநேரே மடத்தில் சென்றேன்-யாம்
விழைந்திடும் தானம் என்றார் வீழ்ந்து நகைத்தேன். (நாட்)

முனிவர் பெருமானை வணங்கி நின்றேன்-அவர்
முக்தியென் றுரைக்கமுகம் வாடிச்சென்றேன்
இனிமதி லுரைப்பவர் இங்கிலை யென்றே-என்
எழில்மதி வருத்தமா யுரைத்ததன்றே (நாட்)

ஒன்றுந் தோன்றாது கடலோரந் தனிலே-வாடி
உண்மையைச் சிந்தித்திருக்கும் வேளையினிலே
என்றுமி லானந்தத்துடன் உள்ளத்தினின்றே-ஓசை
எழுந்தது அன்பு அன்பு அன்புதானென்றே. (நாட்)

எழுந்தேன் தொழுதேன் மிகத்துள்ளிக் குதித்தேன்-அன்பு
என்றெழுதித் தெய்வமென வாழ்த்தித் துதித்தேன்
பொழிந்தே னானந்தக் கண்ணீரெனை மறந்தே-அன்பால்
போற்றுங்க ளெவ்வுயிரையும் மேன்மை யறிந்தே. (நாட்)


வாழ்த்து

இராகம்: மத்யமாவதி தாளம்: விருத்தம்

திங்கள்மும் மாரிபெய்க திருவறம் வளர்கசெங்கோல்
நன்கினி தரசனாள்க நாடெலாம் விளைக மற்றும்
எங்குள அறத்தினோரும் இனிதூழிவாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே.
-சீவகசிந்தாமணி


 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com