முகப்பு வாயில்

 

(12) இராகம்-அடாணா

(1) துட்ட தேவதையென்றுயிர்க் கொல்லுங்கோரம்
தூத்தூவெனத்தூற்றி தொலைத்திட வாரும்
விட்ட பிறவியில் மூண்டவினையோடு
வேறிந்தப் பாவமும் விளைத்திடுங்கேடு (துட்ட)

(2) ஊமைப்ராணிகளின் உயிர்தனை மாய்த்து
உதிரங்குடிப்பதாய் மாந்தரை யேய்த்து
தீமை புரிகின்ற தீய வழக்கத்தால்
தேசமதம் புகழ் தீரத் தொலைவதால் (துட்ட)

(3) பால் தரும் பசுவோடாடெருமைகள் போலே
பன்றி கழுதையும் பகைகொள்ளாதுயிர்மேலே
வேல் சூலங் கரத்தேந்தி விளங்குமத் தெய்வம்
விலங்கினுந் தாழ்ந்ததோ விளம்பு முத்தாரம் (துட்ட)

(4) மருளாளி மனிதனும் மனிதனுமன்றே
மான்பாளன் மறையாளன் மதியாளனன்றே
அருளாளர் நெறியினை அழிக்குமோர் பாவி
ஆயிரஞ் செய்தாலும் அணுகுமோதேவி (துட்ட)

(5) இருவர் பிடித்தாலு மிரைந்தாடுங் காட்சி
எவரேயறிவாரப் போலியின் சூழ்ச்சி
ஒரு விவரமு மறியாம வைன் பின்னே
ஓடி உயிர்மாய்க்கும் ஈனந்தானென்னே (துட்ட)

(6) மன்னுயிர் யாவையுந் தன்னுயிராமென்றே
மதிப்பவர் மனத்தினிவறைவனுளானென்றே
முன்னே ருரைத்தோர் முதமொழி மறந்தே
மூடபக்திதனில் மூழ்குவோரே யிந்த (துட்ட)

(7) சாத்திரவேத புராணங்கள் மூலம்
சாற்றுவரோ பலிக்காதாரங் கேளும்
காத்திகருஞ் செய்யா நமனினுங் கொடிய
நடுக்குறும் பாவியர் மதத்தினில் புகுத்திய (துட்ட)

(13)
(கந்தா காருண்யமே என்ற மெட்டு)
ஜீவகாருண்யமே ஜென்ம புண்ணியமே
பூவில் வாழுயிர்கள் புகல் கண்ணியமே

தேவராதி யானவரும் பாவலர் காவலர் மற்றுங்
காவலர் ஞானிகளோடு மேவிய தவராஜர்போற்றும் (ஜீ)

மாட்சிமைப் பெறுவதற்கு சாட்சிநற் கருமமென்றே
சூழ்ச்சியா றைமறிந்து காட்சியமாய் கொண்டாடஈன்றே
மனித ஜென்மமொன்றே மதி நிறைந்ததொன்றே (ஜீ)

ஆருயிரனைத்துமே நம் பேருயிர்க் கிணையதாமே
கூறிடும் வேதமொழியைத் தேறிடில் சேர்தார்தாமே
அன்பு பூண்டிடுவோம் அருள் சுரந்திடுவோம் (ஜீ)

மண்ணிலே யுயிர்கள்படும் எண்ணிலாத் துன்பங்கள்
(கண்டே
புண்ணிய நமது வாழ்வை பெண்ணிடா துருகிஈண்டே
இரக்கங் கரட்டிடுவோம் இன்பம் ஈட்டிடுவோம் (ஜீ)

ஓடியாடி வேடிக்கையாய் நாடி நம்மை நயந்துநல்ல
காடுமேடு காம்பில்மேய்ந்து கேடுசூதுகள் யாவுமில்லா
ஊமைப் பிராணிகளே உற்ற தோழர்களே (ஜீ)

தேவதைபலி கேட்டதென்று நாவுருசிக்கே விரும்பி
பாவிகள் பூசாரிகளின் கேவல மொழியை நம்பி
கொலையும் புலையும் வேண்டாம் கொடும் பலியும்.
(வேண்டாம் (ஜீ)


(14)
(காந்திரிஷி நம்மைக் காத்திடுஞ் சமரசி என்ற மெட்டு)

பல்லவி

கொல்லாமையே நாம் கொண்டாடில் மேன்மையே
கொல்லாமையே உயிரைக் கொல்லாமையே

சரணம்

எல்லா உயிர்களுங்கை கூப்பித் தொழும் பெருமையே
இன்பமொடு அன்புளமே இயற்றுவிக்கும் வாய்மையே
பொல்லாக் குணங்கள் போக்கிப் புனிதராக்குந் தூய்மையே
புண்ணியராய்ப் பிறப்பிகந்து புகுவர் மோக்ஷப் பதவியே
போற்றுவீரே அருளைக் காத்திடுவீரே நீரே
(கொல்லா)

தேவர் தமக்கிந்திரன் திரு மலைகளிலே மேருவாம்
தினகரனே கிரகங்களுக்குத் திகழுமாழி நீருக்காம்
பூவில்வாழ் மாந்தரேற்றிய புகழுஞ் சக்கிரவர்த்தியாம்
புங்கவன் மறைகளிலே போற்றுஞ் ஜீவகாருண்யம்
புண்ணியரே அன்பை நண்ணியே வாழுவீரே
(கொல்லா)

அரிதாது மானிடமென் றறைந்த மொழி மறந்தவர்
ஆருயிரைக் கொன்றுநாளும் ஐயோ புண்ணை யருந்துவர்
சிறுதெய்வமெனவே காளி மாரி செல்வி சேவிப்பர்
சிந்தையிலே கருணையின்றி ஜீவஹிம்சை செய்குவர்
சேராதீரே பலி கோராதீரே நேரே
(கொல்லா)

(15)
பால கங்காதர திலகரே என்ற மெட்டு

சீவகாருண்ணிய சீலமே
சிந்தை பெருமின்ப கோலமே
பாவவினை போக்கு மூலமே
பன்னுயிர்க்கு மனுகூலமே (சீவ)

அன்புநிறை மனமேடையதே
ஆண்டவன் நர்த்தன மாடுவதே
புன்புலா லொழித்து வாழுவதே
புண்ணிய பிறப்புண் டாக்குவதே (சீவ)

சமாச சன்மார்க்க போதியே
சத்தியர் தழைக்கும் நீதியே
அமரர்கள் போற்றிடு மாதியே
ஐயனருட் பெருஞ் ஜோதியே (சீவ)

16
(சிதம்பரம் போகாம விருப்போனோ என்ற மெட்டு)

தெய்வங் கோரப்பலியை விரும்பிடுமோ-அந்த
தீய பிரார்த்தனைக்குனர் திரும்பிடுமோ (தெய்)

ஆதியுஞ் சோதியும் ஆனந்தப் பொருளும்
நீதியும் போதமும் நிறைந்துயிர்க் கருளும் (தெய்)

இரக்கமும் உருக்கமும் இலாதுயிர்த் துடிக்க
மறுப்பதும் உரிப்பதும் பூஜையாய்த் துதிக்க (தெய்)

பூவும் பழமும் வைத்துப் பூஜிக்கும் பாதம்
நாவும் ரத்தப்புலாலும் காண்பதோ நீதம் (தெய்)

கொலையும் புலையும் விடக் கூறிய வறமொழி
கலையும் மதியும் நிறைமாந்தர்க்கே கண்விழி (தெய்)
 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com