முகப்பு வாயில்

 

ஒரு சில கருத்துக்கள், ஒரு சில உவமைகள், ஒரு சில சொற்றொடர்கள் - ஒன்று போலிருப்பதாலேயே ஒருவர் மற்றவர்களிடமிருந்து அக்கருத்தைப் பெற்றவர்கள் எனத் தீர்மானிப்பது அறியாமையாகும். அவ்விருவருமே இவ்வுலகம் என்ற பெரும்பள்ளியில் அனுபவம் என்ற பாடங்கள் படித்த மேதைகள். ஆதலின் ஒரே உண்மையை இருவரும் கண்டறிந்து பல்வேறுபட்ட கால கட்டத்தில், பல்வேறு பட்ட நாடுகளில், மொழிகளில் கூறியுள்ளனர். இவ்வுண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு அறுநூறு ஆண்டுகட்கு முன்பு பிறந்த மகாவீரரும், புத்தரும் கொல்லாமை அறம் கூறிச் சென்றனர். புத்தமதத் துறவிகள் மூலம் அஹிம்சைக் கோட்பாட்டை அறிந்தவர் ஏசுநாதர். அல்லது தாமாகவே அக்கோட்பாட்டை உணர்ந்திருக்கலாம். ஏசுநாதர் "ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டுக" எனப் பகைவனையும் நேசிக்கும் பண்பாட்டை உபதேசித்தார். குறளிலும்

"இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்" (314)

என்று கூறுகிறார்.

ஒரு பாதிரியார் - செயின்ட் தாமஸ் மயிலாப்பூரில் தங்கிய ஏசுநாதான் நேரடிச் சீடர் - மூலமாகத் திருவள்ளுவர் இவ்வறத்தை அறிந்தார் என்று கூறியதாகத் தொகிறது. இதை விட ஆய்வுப் போலி யாதிருக்க முடியும்?

நம் காலத்து ஆய்வறிஞர்கள் பலருக்கு இந்தியத் தத்துவ ஞானப் பயிற்சியில்லை. ஏதோ தமது சமய ஞான நூல்களையும், தமிழ் இலக்கியங்களையும் கற்றவர்கள். ஆகையால் அவர்கள் தம் சமயக் கண்ணாடி கொண்டு பார்க்கும்போது குறள் தம் சமய நூல் ஆகத்தான் தோன்றும். சில அறிஞர்கள் குறள் சைவ சமய நூல்தான் என்று எழுதியுள்ளார்கள். குறளாசிரியர் திருவள்ளுவர் என்று கூறி அவருக்குத் திருநீறுப் பூசிப் பூணூல் போட்டு மகிழ்ந்துள்ளனர்.

பூணூல் அந்தணர் மட்டுமின்றிப் பிறரும் அணிவர். (க்ஷத்திரியர், வைசியர்) மட்டும் அன்றிச் சமண மக்களும் மும்மணிகளின் குறியீடாகப் பூணூல் அணிவர். "ஆதி பகவன்" என்று கடவுள் வாழ்த்தில் கூறியிருப்பதால் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற அந்தணன் ஒருவனுக்கும் பிறந்தவர் என்று கதை கட்டி ஒளவையார், கபிலர் முதலிய குறளாசிரியர் காலத்துக்கு நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்க் கவிஞர்களைச் சகோதரர்களாக்கிப் புராணப் புளுகுகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். கபிலரகவல் எனும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட சிறுநூலில் வரும் இக்கதை உண்மையில், வடமொழியில் காளிதாசன், பட்டி, வரருசி, தன்வந்த்திரிகள் பற்றிய புராணக் கதையின் தமிழ் வடிவம் தான் என்பதில் ஐயமில்லை. சமண முனிவர் பத்திரபாகு - கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளாயன் (சாம்ராட் அசோகனின் தாத்தா) காலத்தவர். அப்போது பன்னிரண்டாண்டு பஞ்சம் (வற்கடம்) ஏற்பட்டது. அதனால் சந்திரகுப்தன் துறவியாகி, பத்திரபாகுவுடன் தென்னாட்டுக்கு வந்ததாகவும் அதன் காரணமாகச் சமணப் பூர்வாகம நூல்கள் அழிந்துபட்டதாகவும், பன்னிரண்டு ஆகமங்களில் ஒன்று மட்டுமே கிடைத்தது என்று ஒரு வரலாறு கூறப்படுகிறது. இக்கதையையே "இறையனார் அகப்பொருள்" உரைகாரர் கூறிய 'பொருள் அதிகாரம்' கிடைக்கவில்லை என்கிறார். ஆனால் அவருக்கு நெடுங்காலத்திற்கு முந்திய தொல்காப்பியம் பொருள் அதிகாரம், இன்றளவும் நிலைத்திருக்கிறது. ஒருவேளை தொல்காப்பியரும் - முதல் உரைகாரர் இளம்பூரணரும் சமணச்சார்புடையவர்களாதலின் அந்நூல் வைதீக மதத்தினருக்கு எட்டாமல் போய்விட்டதா? என்று தொயவில்லை. எனினும் அவர் கூறும் பன்னிரண்டு வற்கடக் கதை வடபுலக்கதை தான் என்பதில் ஐயமில்லை. சிலம்பிலும் மேகலையிலும் கூறப்படாத இச்செய்தியை இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறுவது வரலாற்றுண்மையன்று என்று சமணக்கதைதான் என்றும் தொகிறது. இது போல ஆய்வாளர்கள் ஏற்கும் வகையான ஆய்வு நோக்கில் நம் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படவில்லை. சமணத்தின் சிறப்புக்கூறான, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர் என்ற உயிர்ப்பிரிவினை சமணத்தில் மட்டுமே உண்டு. கடவுளை இருவினை நீங்கிய முற்றறிவனாக வருணிப்பதும் சமணத்தில் உண்டு. அன்றைய வைதீக, பெளத்த மரபுகளில் உயிர்களை நான்காகவே பகுப்பர். அண்டஜம் (முட்டையிற் பிறப்பது) ஜராயுஜம் (கருப்பையிலிருந்து பிறப்பது) உத்பிஜம் (தாவரம்) ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து - புழுக்கம் - பிறப்பது, புழு, பூச்சிகள்) என்ற பகுப்பே வைதீகம், சைவ, வைணவ, பெளத்த நூல்களில் கூறப்பட்டுள்ளதேயன்றி எதிலும் ஐம்புலன்கள் வழியாக ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் வரையாகப் பகுப்பது சமண தத்துவ நூல்களில் மட்டுமே உள்ள ஒன்று.

இதனைத் தொல்காப்பியரும் வியந்து ஏற்றுக்கொள்வதால் அவர் சமணச் சார்புடையவர் என்று தொகிறது. சமண நூலாகிய ஐந்திரிய வியாகரணம் பயின்றவர் என்றும் பனம்பாரனார் சிறப்புப் பாயிரமும் தொவிக்கின்றது. எனினும் அவர் சமணர் என்பதை ஏற்க மனமின்றி அகத்தியான் சீடர் என்று கதை கட்டிவிட்டனர். அதைப் போன்றே தான் திருக்குறள் ஆசிரியரும் சமணச் சார்புடையவர் என்பதை ஏற்க மனமின்றி உண்மையை ஏற்கத் தயங்குகின்றனர். நான் ஒன்றும் சமணனல்ல, சமண தத்துவக் கருத்துக்களில் ஈடுபாடுண்டு. அதுபோன்றே பெளத்தக் கருத்துக்களிலும் வேத உபநிடதங்கள் கீதையிலும் மிகுபற்றுடையவன். ஒரு நூலைப்பற்றி ஆயும் போது நமது சொந்த விருப்பு வெறுப்புகள் இடம் பெறக்கூடாது. காய்தலுவத்தலகற்றி ஆய்தல் வேண்டும் என்பதே நமது முன்னோர் கண்ட நெறியாகும். ஆதலால்தான் குறள் எந்த மரபைச் சார்ந்த நூல் என்பதை ஆய்வு நோக்கில் பார்க்கவேண்டும் என்று விழைகிறேன்.

'திருவள்ளுவமாலை' பிற்காலத்தது என்பது அனைவரும் ஏற்கும் கருத்தாகும். குறளிலோ பிற உரையாசிரியர்களின் நூல்களிலோ வள்ளுவர் குறித்து யாதொரு வரலாறும் கூறப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதிய அவர் 'தமிழ்' என்ற சொல்லையே எங்கும் குறிப்பிடவில்லை. காமத்துப் பாலில் தலைவியை வருணிக்கும் இடங்களில் பிற கவிஞர்கள் போலத் 'தமிழ் போன்ற இனியவள்' என்று கூறவே இல்லை. அதுபோன்றே "யாம்" என்று தம்மைச் சில இடங்களில் புலப்படுத்துகிறாரேயன்றித் தம் பெயரையும் நூல் முதலிலோ, இறுதியிலோ குறிப்பிடவே இல்லை. நீலகேசி உரையாசியரும் கூட "இது எம் ஓத்தாகலின்" (இது எமது புனிதநூல்) என்று கூறினாரேயன்றி வள்ளுவர் என்று குறிப்பிடவில்லை. மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனாரும் "பொய்யில் புலவன்" என்றே கூறினார். பிற்கால ஒளவையாரும் - "தேவர் குறளும்" என்றே கூறினார். எனினும் திருவள்ளுவர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. குந்தகுந்தாச்சாரியரே குறள் ஆசிரியர் என்ற கருத்துத் தமிழகச் சமணப் பெருமக்களிடம் நிலவுகிறது. வந்தவாசி - பொன்னூர் மலையில் குந்த குந்தர் பாதச் சுவடுகள் உள்ளன. அவற்றைச் சமணர் இன்றும் வணங்கி வருகின்றனர்.

திருக்குறளாசிரியர் தமிழர். அந்நாளில் தமிழகம் முழுதும் சுற்றித் திரிந்து - தமிழ்மக்களின் வாழ்க்கையையும், தமிழ் இலக்கியத்தையும் நன்கறிந்தவர் என்பதில் ஐயமில்லை. சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளையும் கற்றவர். வைதீக, சமண, பெளத்த நூல்களையும் கற்றவர் என்பதில் ஐயமில்லை.

அவரது காலம் குறித்தும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. மணிமேகலை ஆசிரியருக்கு முன்பிருந்தவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் மணிமேகலை ஆசிரியர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும், ஐந்தாம் நூற்றாண்டு என்றும், ஏழாம் நூற்றாண்டு என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூல் தான் என்பதே எனது கருத்து. பெரும்பாலும் தமிழறிஞர்கள் - தமிழ்த்தாத்தா உ.வே.சா. மற்றும் தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் - கருத்தும் இதுவே. ஆதலின் அவருக்கு முன்னைய திருக்குறளை - கி.பி. முதல் நூற்றாண்டு நூலாகக் கொள்வதே பொருத்தமாகும்.

ஒரு நூலை ஆயும்போது அது எக்காலத்தது எந்த இடத்தது என்ற அடிப்படையைத் தெளிவாக ஆராய்ந்து காணாவிட்டால் அது போலி ஆய்வேயன்றிப் பொருத்தமான ஆய்வாகாது.

வள்ளுவர் காலத்துச் சமயங்கள்

குறள் எச்சமயச் சார்புடைய நூல் என்பதை ஆய்வோமானால் முதலில் வள்ளுவர் காலத்துச் சமயங்கள் எவை எவை? கோட்பாடுகள் எவை? என்பதைப் பற்றிய தெளிவிருத்தல் வேண்டும்.

அவர் காலத்தில் நம் நாட்டில் வைதீக சமயம், சமண சமயம், பெளத்த சமயம் எனும் முப்பெரும் சமயங்கள் இருந்தன. அத்துடன் சமய மறுப்பாளர்களாகிய சார்வாகர்கள் எனும் நாத்திக வாதிகளும் இருந்தனர். வைதீக சமயத்திலும் சாங்கியர் வைசேடிகர், நையாயிகர், யோகர், பூர்வ மீமாம்சகர், உத்தர மீமாம்சகர் எனும் ஆறு தாசன தத்துவவாதிகள் இருந்தனர். அத்துடன் சிவ வழிபாட்டினர், திருமால் வழிபாட்டினர் ஆகிய சைவ, வைணவர்களும் இருந்தனர். இவர்களுள் புத்தர் மட்டுமே தம் சமயத்தைப் பிரசாரம் செய்ய சங்கம் அமைத்துப் பரப்பி வந்தார். அவருக்குப் பின்னர் தான் மற்ற சமயத்தினரும் தம் மதம் பரப்ப நிறுவனங்களை உருவாக்கினர். வள்ளவர் காலத்தில் சிவன், முருகன், திருமால், கண்ணன், பலராமன், கொற்றவை ஆகிய தெய்வ வழிபாடுகள் இருந்தன. இந்திரன், வருணன் ஆகிய வேதக் கடவுளர்களையும் வழிபட்டனர். வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் ஆகிய மூவரே பெருந் தெய்வங்களாக இருக்க, ருத்திரன் (சிவன்) (விஷ்ணு) (திருமால்) சிறு தெய்வங்களாகவே இருந்தனர். திருமாலை உபேந்திரன் என்றும் அழைப்பர்.

"விஷ்ணோ: கர்மாணி பஸ்யத யதோவ்ரதானி
- ஸஸ்ஸஸே:

இந்த்ரஸ்ய யுஸ்யஸ் ஸகா2".
(ரிக்வேதம் - முதல்மண்டலம் 23-19)

எனும் சூக்தம் விஷ்ணுவை இந்திரனின் நண்பனாகவே வருணிக்கிறது.

வேத காலத்தில் அக்னி (தீ)யும் வருணனும் (நீர்) ஆகிய இருபெரும் முரண்பட்ட இயற்கைச் சக்திகளே இறைவனாக்கப்பட்டுப் பிற்காலத்தில் சிவன், விஷ்ணு எனும் கடவுளர்களாக மாற்றினர். தீ செம்மை வடிவம், சேயோன் சிவன் ஆக, நீர் - கருமை வடிவம் மாயோனாகிய விஷ்ணுவாக உருவகித்தனர். ஆரிய திராவிட இனக்குறியீடே சிவவிஷ்ணு பேதங்கட்குக் காரணம் என்பாருமுளர்.

வேதத்தில் முக்கியமாக உபநிடத காலத்தில் ஏகம்ஸத் விப்ரா பகுதாவதந்தி (ருக்வேதம்) என்று கூறி ஒரே பரம்பொருட் கொள்கை ஏற்கப்பட்டது.

அந்தப் பிரம்மமான பரம்பொருளே சங்கல்ப மாத்திரத்தால் இவ்வுலகைப் படைத்தது என்றும் ஆத்மா நித்தியமானது, (தத்சத்) அதுவன்றி வேறில்லை என்றும் கூறிற்று. வேள்விகள் முக்கியக் கடமையாக விதித்து வருணாசிரம தருமத்தை வற்புறுத்தியது. பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ரர் எனும் வருணங்களும், பிரம்மசாயம், கிருஹஸ்தம் (இல்லறம்) வானப்பிரஸ்தம், சன்யாசம் (துறவு) எனும் ஆசிரமங்களும் வேதநெறியில் அடிப்படைகளாகும். பூர்ம மீமாம்சகர்கள் வேள்வியாகிய கரும காண்டத்தைச் சிறப்பித்தனர். உத்தர மீமாம்சகர் ஞான காண்டத்தைச் சிறப்பித்தனர். வேதமத நூல்களான ஸ்மிருதிகள் (மனுஸ்மிருதி, யாக்ஞவல்க்ய ஸ்மிருதி, முதலியன) கூறும் அறமும் பகவத் கீதை கூறும் அறமும் வருணாசிரம அடிப்படையை வலியுறுத்துவன. வள்ளுவர் வேதநெறியனரா? என்பதை முதலில் பார்க்கவேண்டும். பார்த்தோமானால் அவர் வேத மரபைப் பின்பற்றியவரல்லர் என்பது தெளிவு. வள்ளுவர், - வருணாசிரம தருமத்தை ஏற்கவில்லை. தம் கடவுள் வாழ்த்தில் ஏகம் - பிரம்மம் ஆகிய பரம் பொருளைக் கூறவில்லை என்பது தெளிவு. வேள்வியை மறுத்துள்ளார் - வேள்வியில் உயிர்ப்பலி உண்டு. அதைச் சமணரும் பெளத்தர்களுமே மறுத்தனர். வள்ளுவர்,

"அவிசொந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று" (259)

என்று கூறுகிறார்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com