முகப்பு வாயில்

 

அக்காலத்தில் சமயச் சார்பற்ற உலகாயதவாதிகள் (சாருவாகநெறியினர்) இருந்துள்ளனர் என்பதற்குத் தொல்லிலக்கியச் சான்றுகள் உள்ளன. வள்ளுவர் உலகாயதவாதிகயல்லர் (நாத்திகரல்லர்) அவர் ஆன்மாவை ஏற்கிறார். சுவர்க்க நரகங்களை ஏற்கிறார்.

வானோர்க்கு (18)
"வானுறையும் தெய்வத்துள்" (50)
"புத்தேளிர் வாழும் உலகு" (58)
"வானத்தவர்க்கு" (86)
"வானம் நணியதுடைத்து" (353)
"வானேர்க்குயர்ந்த உலகம்" (346)
"வானுறையும் தெய்வத்துள்" (50)

என்று சுவர்க்கத்தைப் பற்றியும்,

"அண்ணாத்தல் செய்யா தளறு" (255)
"தான்புக் கழுந்தும் அளறு" (835)
"பூரியர்கள் ஆழும் அளறு" (919)

என்று நரகத்தைப் பற்றியும் கூறுகிறார்.

மறுபிறப்புக் கொள்கையை ஏற்றுள்ளார். வினைக்கோட்பாட்டையும் ஊழையும் ஏற்கிறார். ஆதலின் வள்ளுவர் நிச்சயமாக நாத்திகர் (உலகாயதர்) அல்லர். அக்காலத்தில் சமணத்தோடு தொடர்புடைய ஆசிவர்கள் இருந்துள்ளனர். மகாவீராடம் சிலகாலம் சீடராக இருந்து தனித்துப் பிரிந்துவிட்ட மற்கலிகோசலர் இம்மதத்தின் தலைவர். இவரைப்பற்றி ஜைன, பெளத்த சமய நூல்களிலும் தமிழில் மணிமேகலையிலும் நீலகேசியிலும் குறிப்புகள் உள்ளன. அவற்றின் மூலம் இவரது கோட்பாடுகள் தொகின்றன.

ஆசிவகர்கள், திகம்பரர்களாக, மது, மாமிசம், தவிர்த்தவர்களாக இருந்துள்ளனர். ஆன்மாவை ஏற்று, மறுபிறப்பு, வினைக் கொள்கைகளை ஏற்றவர்கள்தான். எனினும் நியதிக் கொள்கையினர். விதிக் கொள்கையை ஏற்பவர்கள்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்." (620)

என்று கூறுகிறார். அதே போல,

"ஊழிற் பெருவலி யாவுள?" (380)

என்றும் கூறுகிறார். ஒவ்வொரிடத்திலும் தாம் கூறும் கருத்தை வலியுறுத்திச் சிறப்பிக்கும் பாங்கு வள்ளுவாடம் காண்கிறோம். ஆசிவகர்களின் நவகதிர்தத்துவம், ஈங்கில்லை. 'ஆதிபகவன்' என்று சமணத்தீர்த்தங்கரராகிய முதல் அருக தேவனையே முதற்பாடலில் குறிப்பிடுவதால் ஆசிவகரல்லர்; சமணச் சார்பினரே என்று தீர்மானிக்க முடியும்.

அவர் காலத்தில் தாந்திக நெறியினரும் இருந்தனர். பஞ்ச மகாரங்களாகிய மது, மச்சம், மாது, முத்திரை, மாமிசம் எனும் ஐந்தையும், தவிராத - மந்திர தந்திரங்களில் மக்களை மயக்கிய அந்நெறியினரையே வள்ளுவர் கூடாவொழுக்கம் எனும் அதிகாரத்தில் கண்டித்துள்ளார். போலித் துறவிரானாகிய அவர்களைப் பார்த்து

"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நல்கும்". (271)

என்று கூறுகிறார்.

இனி எஞ்சி நிற்கும் சமண நெறியினர்தாமா என்பதற்கான சான்றுகளைக் காண்போம்.

குறள் சமணச் சார்பு நூலே

குறளாசிரியர் நோக்கமெல்லாம் சமுதாய நலனுக்கான அறங்கூறுதலேயாகும். வள்ளுவர் எப்போதும் பொதுவறங்கூறும் பாங்கினர் என்பது தெளிவு. பாமேலழகரும்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை" (322)

என்ற குறளுரையில் கூறுகிறார்:

"எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பாதலின்" எனக் கூறுவது உண்மைதான். என்றாலும் அவர் வைதீக மதச் சிந்தனையாளரா? பெளத்த மதச் சிந்தனையாளரா? சமண சமயச் சிந்தனையாளரா? என்ற கேள்வி எழுகிறது. அவர் காலத்தில் இம்மூன்று நெறிகள்தாம் சிறப்பாக இருந்தன. அதில் வள்ளுவர் சமண சமயச் சார்பளரே என்பதே உண்மை. இதற்குத் தகுந்த சான்றுகள் உள்ளன. திரு.வி.க,. பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பன்மொழிப்புலவர் வெங்கடராஜூலு ரெட்டியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, ஆர்.கே. சண்முகம் செட்டியார், மயிலை சீனி வெங்கடசாமி முதலிய அறிஞர்கள் வள்ளுவர் சமணர் என்றே கூறியுள்ளனர்.

சமண சமயக் காவலரும், சான்றோருமாகிய ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால அவர்கள், "திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்" "தமிழகத்தில் ஜைனம்" ஆகிய இருநூல்களிலும் வள்ளுவர் சமணர் என்பதை நிறுவியுள்ளார். அச்சான்றுகளையெல்லாம் இங்கு மீண்டும் கூறத் தேவையில்லை. முதல் குறளில் 'ஆதிபகவன்' என வருவது முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் எனப்பட்ட ரிஷப தேவரையே குறிக்கும்.

முதலில் கடவுள் வாழ்த்தில் - ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், எண்குணத்தான் என்று கூறும் பெயர்கள் எல்லாம் சமணத்தைச் சார்ந்தே உள்ளன. கடவுள் என்று அவர் பெயர் சூட்டவில்லை என்றாலும் அதுவும் தீர்த்தங்கரரையே குறிக்கும்.

இங்கு முதலில் கடவுள் என்ற கோட்பாட்டைக் குறித்துத் தெளிவு பெறல் வேண்டும். நாம் பொதுவாகக் கடவுள் என்றால் உலகையும் உயிர்களையும் படைத்த ஒரு பரம்பொருள் என்று கருதுகிறோம். ஆனால் தத்துவாதியாக இக்கருத்து பிழையாகும். உலகமும் உயிர்களும் என்றுமுள தத்துவங்கள். ஒருவரால் படைக்கப்பட்டதன்று என்றே பல சமய தத்துவ நூல்கள் பேசுகின்றன. வைதீகம் சார்ந்த நையாயிகர்களும் வேதாந்திகளும் (உத்தரமீமாம்சை) தாம் பிரம்மம் (கடவுள்) உலகை சங்கல்ப மாத்திரத்தால் படைத்தததாகக் கூறுவர். வைதீகம் சார்ந்த மற்ற சாங்கியம், யோகம், வைசேடிகம், பூர்வமீமாம்சை, சைவம், வைணவத் தத்துவங்களில் உலகமும் உயிர்களும் என்றும் நிலைபேறுடைய தத்துவங்களேயாகும். உயிர்களின் வினைக்கீடான பயன்தரும் ஒருவராகவே கடவுள் சைவ, வைணவங்களில் கூறப்படுகிறார். சமணமதத்தில் "வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவன்" என்று தொல்காப்பியம் கூறுகின்ற ஒருவரே கடவுளாவார். தொல்காப்பியர் - பொருளதிகாரப் புறத்திணையியலில் 27ஆம் சூத்திரத்தில்

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே".

என்று கடவுள் வாழ்த்துப் பற்றிக் கூறுதல் காண்க.

வேதமரபில் - பிரம்மம், சிவன், விஷ்ணு, முருகன், சக்தி முதலிய தேவர்கள் பெயர் சுட்டி வணங்குவதுதான் மரபாகும்.

பெளத்த மரபிலும் புத்தரைக் குறிப்பிட்டே வணங்குவர். 'புத்தம் சரணம் கச்சாமி' என்று திரிசரணத்திலும் வருவது காண்க.

ஆனால் சமண மரபில் மட்டுமே கடவுள் வணக்கம் பெயர் சுட்டப்படாமல் பொதுவான தீர்த்தங்கரர், சாதுக்கள், ஆசாரியர்களைக் குறிப்பிட்டு வணங்கும் முறையுள்ளது.

ணமோ அரஹந்தானம்
ணமோ சித்தாணம்
ணமோ ஆயாயாணம்
ணமோ உவஜ்ஜாயாணம்
ணமோ லோயே ஸவ்வஸாஸணம்

என்பது சமண மங்களசூத்திர வணக்கமாகும்.

"அருகர்கட்கு வணக்கம், சித்தர்கட்கு வணக்கம்
ஆசாரியர்கட்கு வணக்கம், உபாத்தியாயர்கட்கு
வணக்கம். உலகிலுள்ள எல்லாச் சாதுக்களுக்கும் வணக்கம் என்பது இதன் பொருள்.

குறளிலும் கடவுள் வாழ்த்துப் பொதுப்பட அருகருக்குக் கூறியுள்ளதோடன்றி 'நீத்தார் பெருமை'யில் பிற சாதுக்கள், ஆசிரியர்கட்கும் கூறியுள்ளார். இது சமண மரபிற்கேற்புடையதாக அமைதல் காண்க.

சமணத்தில் தீர்த்தங்கரரையே 'கடவுள்' என்பர். சமண நூலாகிய நாலடியார் கடவுள் வாழ்த்துப்பாடலில்

"வானிடு வில்லின் வரவறியா வாய்மையாற்
கானிலந் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம்உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று (நாலடி 1)

என்று அருகதேவரைக் கடவுள் என்கிறார். கவிச் சக்கரவர்த்தி கம்பர், தம் இராமாயணம் யுத்தகாண்டம் இந்திரசித்துவதைப்படலம் 56ஆம் பாடலில்

"வில்லாள ரானோர்க்கெல்லாம் மேலவன் விளிதலோடும்
செல்லா தவ்விலங்கை வேந்தர்க் கரசெனக்களித்த தேவர்
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது
கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டம்ஒத்தார்.

என்று கொல்லாத விரதமுடைய சமணர்தம் கடவுளர்களான தீர்த்தங்கரர்கள் திகம்பரமாக இருந்ததை நினைவு கூர்ந்து பாடியுள்ளார். இதைவிட வேறு சான்று வேண்டுமோ? கடவுள் என்பது தீர்த்தங்கரர்தாம்! முதற்குறளில் கூறப்பட்ட ஆதிபகவன் - சமணர் தம் அருக தேவனாகிய முதல் தீர்த்தங்கரர்தான்.

"பகவனே ஈசன் மாயோன் பங்கயன் ஜினனே புத்தன்"

என்று சூடாமணி நிகண்டு கூறும். ஆனால் ஆதிபகவன் என்றால் அது சமண தீர்த்தங்கரரையே குறிக்கும். பிற வைதீகக் கடவுளர்கட்கு 'ஆதிபகவன்' என்ற பெயர் இல்லை. அமரகோசம், போன்ற வடமொழி நிகண்டுகளிலும் சூடாமணி போன்ற தமிழ் நிகண்டுகளிலும் இப்பெயர் யாருக்கும் கூறப்படவில்லை.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com