முகப்பு வாயில்

 

"ஆதிபகவனை அருகனை" - திருக்கலம்பகம்

"ஆதிபகவன்" - திருப்பாமாலை

முதலிய நூல்களில் தீர்த்தங்கரருக்கே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

"மலர்மிசை ஏகினான்" என்ற பெயரும் சமணச் சார்புடையதே. சமண, பெளத்த மரபுகளில் - போதி ஞானம் பெற்ற புத்தர்கட்கும், தீர்த்தங்கரர்கட்கும் இந்திரன் ஏவல் செய்வான் என்றும், அவர்கள் பாதங்கள் நிலத்தில் படா. தாமரைப் பூக்கள் தோன்றும் அப்பூமிசையே பூமியில் நடப்பர் என்றும் கற்பனை செய்யப்படுகிறது. இக்கற்பனை வைதீகத்தில் இல்லை. தேவர்கள் கால் நிலம் தோயா என்பது வைதீகத்தில் உண்டெனினும் காலுக்குப் பூக்கள் தோன்றி உதவும் என்ற கற்பனை ஆங்கில்லை. பிற்காலத்தில் சங்கரர் சீடர் பதுமபாதர் கதையில் இக்கதை வருவது - எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே.

"விரி பூந்தாமரை மேற்சென்ற திருவாரடி போற்றி"
- சீவக சிந்தாமணி.

"விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்"
- சூளாமணி.

"பூவின்மேல் சென்றான் புகழடிமை" - அறநெறிச்சாரம்

"மலர்மிசை நடந்தான் மாணடி" - சிலப்பதிகாரம்

போன்ற சமணநூல்களில் வரும் பிரயோகங்களைக் கண்டால் மலர்மிசை ஏகினான் என்பது தீர்த்தங்கரரைத்தான் என்பது புலப்படும்.

பாமேலழகர் - சிறந்த உரையாசிரியரேனும் அவர் வைதிகமதச் சார்பாய் உரை வகுத்ததனால் 'இதயத்தாமரை' என்று குறித்தார். இறைவன் இதயத் தாமரையில் இருப்பவனேயன்றி நடப்பவனல்லன்.

அவர் தம் உரையில் "இதனைப் பூமேனடந்தான்" என்பதோர் பெயர் பற்றிப் பிறிதோர் கடவுட்கேற்றுவாருமுளர்" என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். சூடாமணி நிகண்டில் அருகன் பெயர்களில் "பூமிசை நடந்தோன்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

எண்குணன் என்பது தீர்த்தங்கரரையே குறிக்கும். சிவனை அஷ்டமூர்த்தியாகக் காளிதாசர் முதலியவர்கள் வருணித்தனரேயன்றி அஷ்டகல்யாண குணங்களுடையவராகக் கூறவில்லை.

பாமேலழகர் - இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது என்று கூறும் 'தன் வயத்தனாதல்' முதலிய எட்டுக் குணங்கள் பொதுத் தன்மையால் எல்லா இறைவர்க்கும் பொருந்துவதே. அவரே "தடையிலா அறிவை முதலாக உடையன" என உரைப்பாரும் உளர்" என்று சமணர்கள் தீர்த்தங்கரரைக் கூறும் எண்குணம் பொருந்துமென்கிறார்.

"எண்குணத்துஎம் காவலனை" - திருநூற்றந்தாதி

"இறைவன் ஈசன், எண்குணத் தலைவன் நீ" - மேருமந்தர புராணம்

"பண்ணவன் எண்குணன்" - சிலப்பதிகாரம்

என்று சமண நூல்கள் குறிப்பிடுவது காண்க.

ஐந்தவித்தான், இருவினை நீங்கியவன், ஆகிய பெயர்களை நோக்கினும் அது தீர்த்தங்கரரைச் குறிப்பிடுவதன்றி - சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களைச் சுட்டா. இந்தத் தெய்வங்கள் அந்த மத நூல்களிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் சிவனும், விஷ்ணுவும், அவதாரமெடுத்தல், பகைவரை அழித்தல் முதலிய செயற்பாடுகளையுடையவர்களாவர்.

பற்றுக, பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)

என்ற குறளிலும் பற்றற்றவன் எனத் தீர்த்தங்கரரையே கூறுகிறார்.

சமண மதத்தின் கடவுளராய்த் தீர்த்தங்கரர்கள் வேண்டுதல் வேண்டாமை இலாத இருவினை நீங்கிய, மனிதர்களில் மேமம்பட்ட தவமுடைய, வாழ்நெறி காட்டும் தீர்க்கதாசிகளாவர். அவர்கள் தாள் வணங்குவதால் நம் பிறவித்துயர் கெடும் என்பதும் அவர்கள் சர்வக்ஞர் (வாலறிவன்) என்பதும் சமணர்கொள்கை. குறளில் வரும் கடவுள் வாழ்த்து உறுதியாக ஐயமின்றிச் சமணக் கடவுளரான தீர்த்தங்கரரையே குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் அகம், புறம் தவிர்ந்த கீழ்க்கணக்கு நூல்களில் சமணர்கள் அளித்த கொடையே மிகுதி. அறநூலாசிரியர்களாக அவர்கள் திகழ்ந்தனர். சமணர் தம் அடிப்படைக் கோட்பாடான மும்மணிகளில் (சம்யக் ஞானம், சம்யக் தாசனம், சம்யக் சாரித்திரத்தில்) அறநெறியையே கூறியுள்ள தனிச்சிறப்புண்டு. பெளத்தமும் தர்மம் (அறம்) மும்மணிகளில் ஒன்றாகக் கருதும். பிற மதங்கள் அறத்தைவிடக் கடவுள் பக்திக்கே சிறப்பிடம் தந்தன.

கடவுள் அருள் இருந்தால் அறக்கேடுகள் மன்னிக்கப்படும் என்று கூறி மக்களைக் கவர்ந்தன. சமணம் அறத்தை முதன்மைப்படுத்திய சமயம். நல்லறம் என்றே சமணத்துக்குப் பெயாடுவர். பெளத்தம் - அன்பும் கருணையும் மிக்க மதம். ஆதலின் அறத்தை விட அன்பைச் சிறப்பித்தது. ஆனால் சமணம் அறத்தையே சிறப்பித்தது. ஆதலினால்தான் நல்வினைக்கு நற்பயனும் தீவினைக்குத் தீய பயனும் நிச்சயம் என்றும் இந்தக் கருமக்கோட்டை மீற முடியாது என்றும சமணம் கூறுகிறது. குறளும் இக்கருத்தையே கூறுகிறது. வள்ளுவர் சம்யக் சாரித்திரத்தையே 'அறன் வலியுறுத்தல்' மூலம் குறிப்பிடுகிறார். மற்றும் நாலடியார் சமண நூல் என்பதனை யாரும் மறுப்பதில்லை. அதே போல முப்பால் அறங்களை, பத்துப் பத்துப்பாக்களில் கூறும் முறை திருக்குறளிலும் உள்ளது. குறளும் நாலடியும் ஈரடி, நான்கடி வெண்பாக்கள் என்ற வேறுபாடு மட்டுமே. நாலடியார் சமணம் என்று ஒத்துக்கொள்வோர் குறளை மட்டும் தம் சமயமாகக் கூற முற்படுவது அதன் பெருஞ்சிறப்பினாலேதானன்றி வேறன்று. நடுநிலையாளர் இருநூலும் சமணம் என்பர். சமணத்தில் - சுவர்க்கம், தேவர்கள் உண்டு. சமண பெளத்த சமயங்கள் இந்திரன் (சக்ரன்) பிரம்மா ஆகிய தேவர்களை ஏற்பர். அவர்களை விடத் தம் தீர்த்தஙகரர், புத்தரை உயர்வுடையவராகக் கருதுவர். ஆதலின் குறளில் இந்திரன் என்று வருவது வைதீகக் கடவுள் மட்டுமல்லன். சமணத் தெய்வமும் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரனைச் சிறப்பிக்கும். தவமுனிவர் ஆற்றல்கண்டு பாண்டு கம்பளம் துளங்கும் என்றும் அதுகண்டு இந்திரன் அஞ்சி வருவான் என்றும் அருள்தருவான் - அல்லது தன் பதவியை அவர் அடைவர் என அஞ்சித் தவம் கெடுக்க முனைவான் என்றும் கூறுவர். ஆதலின்

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கா (25)

என்பதற்கு, குறளின் முதல் உரைகாரரும், சமணச் சான்றோருமாகிய மணக்குடவர் "நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்புலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே சான்று".

இந்திரன் சான்றென்றது, "இவ்வுலகின் கண் மிகத் தவஞ்செய்வார் உள்ளாரானால் அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலால் இது தேவானும் வலியனென்றது" என்கிறார்.

ஆனால் பாமேலழகர்,

"தான் ஐந்தவியாது சாபமெய்தி நின்று
அவித்தவன் ஆற்றலுணர்த்தினான் ஆகலின்"

என்று இராமாயணத்தில் வரும் கெளதமர் - அகலிகை கதையை நினைவூட்டுகிறார், இது பொருத்தமன்று. குறளில் குறிப்பிடுவது வைதீக இந்திரன் அல்லன். சமண சமயத்தார் கருதும் இந்திரன் என்பதே பொருந்தும்.

உண்மையில் அகலிகை கதை வேதத்தில் உருவக் குறியீடாக வந்துள்ளது. அதில் சூரியனை இந்திரனாகவும், இரவினை அகலிகையாகவும் சந்திரனைக் கெளதமனாகவும் உருவகிக்கப்பட்டுள்ளது.

"ய ஏவு ஸர்யர் தபதி ஏஷஉ பவ இந்த்ரம்"

என்று சதபதப்பிராமணம் (4-5-9-4) குறிப்பிடுகிறது. சூரியனை இந்திரனாகக் குறிப்பிடுவதாகத் தொகிறது. ஏழாம் நூற்றாண்டினராகிய குமாரிலபட்டர் தமது தந்திர வார்த்திகத்தில் இந்த உருவகத்தை விளக்கியுள்ளார். சந்திரனுக்குரிய இரவைச் சூரியன் வந்து கெடுப்பதாக உருவகம்.

"அஹ: லீயதே" பகல் ஒடுங்குவது என்று அஹல்யாவின் சொற்பொருள் ஆகும். இந்த வேத உருவகமே பிற்காலத்தில் இராமாயணம் மற்றும் புராணங்களில் கதையாக்கப்பட்டது. ஆதலின் வள்ளுவர் வைதீக இந்திரன் கெளதமர் கதையைப் பிறனில் விழையாமையில் சொல்வது பொருத்தமே அன்றி நீத்தார் பெருமையில் கூறுவது பொருத்தமன்று. ஆதலின் நிச்சயமாக வள்ளுவர் கூறுவது சமண சமயத்தினர் கூறும் இந்திரனேயாகும்.

"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாய தெல்லாம் ஒருங்கு" (610)

என்று உலகையளந்த திருமாலின் திரிவிக்கிரம அவதாரக் கதையைக் கூறுவது கொண்டு வைணவச் சார்பன்றோ? எனச் சிலர் வாதிட முனவைர்.

சமண சமயத்தார் - வைதீக சமய இலக்கியங்களையும் தம்மதாக ஏற்றுக்கொண்டவர்கள். பெளத்த சமயத்தில் இவ்விதம் இல்லை. பெளத்த இலக்கியம் முழுவதுமே புத்தரை மையமாகக் கொண்டு, புத்தர் ஜாதகக் கதைகளை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டவையாகும். தமிழில் மணிமேகலை காவியம் ஒன்று மட்டுமே விதிவிலக்கு. பாலி, சமஸ்கிருத, சிங்கள மொழிகளிலுள்ள இலக்கியங்கள் புத்தரை மையப்படுத்திய அவர் வரலாற்றுக் கதைகள்தாம். ஆனால் சமணம் அப்படியன்று. சமணத்தில் இராமாயணம், பாரதம் இரண்டுமே உள்ளன. சமஸ்கிருதம், பிராகிருதம் கன்னடம் ஆகிய மொழிகளில் சமண இராமாயண பாரதம் இல்லை. ஆயினும் வைதீகப் புராணக் கதைகள் பலவும் சமண இலக்கியத்திலும் உள்ளன. திரிவிக்கிரமன் கதையும் வேதக் கதையாகும். சூரியன், பாதளம், பூமி, ஆகாயம் ஆகிய மூன்றையும் கடக்கும் இயற்கை நிகழ்ச்சியை மூன்றுலகையும் அளந்ததாகப் புராணக் கற்பனையில் வந்து உள்ளது.

வள்ளுவர், மாவலியிடம் வாமனன் சென்று இரந்து, மூவடியால் உலகளந்த கதையைக் குறிப்பிடுகிறாரா? வேதக்கதையைக் குறிப்பிடுகிறாரா? என்று தொயவில்லை. எதுவாயினும் அக்கதை சமணத்திலும் உள்ள ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.

"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு" (1103)

என்று புணர்ச்சி மகிழ்தலில் தலைவன் கூற்றாக வரும் குறளில் தாமரைக்கண்ணான் என்று திருமாலையும் அவர்தம் வைகுந்த உலகையும் கூறியுள்ளாரன்றோ? என வினவலாம். பாமேலழகர் செங்கண் மாலுலகம் என்றே கூறுவார். மணக்குடவர் தம் உரையில் "இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானேயென்று கூறியது" என்கிறார். இதனை மறுத்த பாமேலழகர் கூறுகிறார்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com