முகப்பு வாயில்

 

"இந்திரனுலகு என்றுரைப்பாருமுளர்"

தாமரைக்கண்ணானென்பது அவனுக்குப் பெயரன்மையின் அது உரையன்மையறிக"

வடமொழி நிகண்டுகளாகிய அமரசிம்மனின் (கி.பி. நான்காம் நூற்றாண்டு) வைஜயந்தி ஆகியவற்றிலும் தமிழில் சூடாமணி நிகண்டுவிலும் புண்டாகாட்சன், சலசலோசனன் என்று திருமாலையே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரன் பெயராக வரவில்லை என்பதும் உண்மை. அதனால்தான் பாமேலழகரும் "உரையன்மையறிக" என்றும் கூறியுள்ளார். இந்திரனை ஆயிரங்கண்ணனாகக் கூறுவதும் மரபாகும். இந்திரன் - தீர்த்தங்கரரைச் சேவித்து அவரைக் காண ஒரு கண்போதாதென்று ஆயிரங்கண்கொண்டு கண்டுகளித்தான் என்பது சமண மரபுக்குரிய செய்தி. ஆயிரங்கண்ணன் என்பதற்குப் புராணம் கூறும் கதை சிறப்பில்லாத பொருந்தாக் கதையாகும். வானகத்துத் தோன்றும் விண்மீன்களையே கண்களாக உருவகித்து வானத்தையே இந்திரனாக உருவகித்தனர் என்பதே வேத மரபுக்கேற்ற கருத்தாகும்.

முக்கண்ணன் என்பது சிறப்புப் பெயராக சிவனைக் குறிப்பினும் - வினாயகர் போன்ற பிற தெய்வங்களையும் சில இடங்களில் குறிப்பிடுவது போலத் தாமரைக் கண்ணான் என்பது சிறப்பு நோக்கித் திருமாலைக் குறிப்பினும் இந்திரனையும் குறிக்க இடமுண்டு. இந்திரனை விஷ்ணுவாகவே கருதும் மரபும் உண்டு. விஷ்ணுவிற்கே உபேந்திரன் என்றே பெயருண்டு. அமர கோசத்தில் உபேந்திரன் என்ற சொற்பொருள்; "இந்திரன் உபகீத அனுஜத்வாத் உபேந்தர" என்று இந்திரனுக்குப் பின் பிறந்தவன் (தம்பி) என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

வேதத்தில் இந்திரன் பெருந்தெய்வமாக இருக்க புராண காலத்தில் தான் விஷ்ணு பெருந்தெய்வமான செய்தியை முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதனால் போலும் "உபேந்திரன்" என்ற பெயரை விஷ்ணு பெற்றார் - துவாதச ஆதித்தியர் (பன்னிரு சூரியர்கள்) பெயாலும் விஷ்ணு, இந்திரன் - எனச் சூரியர்களின் பெயர்கள் வருகின்றன. "திருவுடைமன்னரைக் காணில் திருமாலைக் கண்டாற் போல அரசர்களைத் திருமாலாகவே உருவகித்தும் இந்திரனாகப் பாராட்டியும் பேசும் மரபையும் பார்க்கும்போது - திருமாலையும் இந்திரனையும் ஒன்றாகப் பாவித்து தாமரைக் கண்ணான் என்று வள்ளுவர் வருணித்திருக்க வேண்டும். ஈண்டு பெண்ணின்பத்தைப் பாராட்டும்போது சுவர்க்க போகத்தை உவமிப்பதே பொருத்தமாகும். "இந்திரர் அமிழ்தம்" "இந்திரர் லோகமாளும் அச்சுவை" போன்ற பிரயோகங்கள் சுவர்க்க இன்பத்தையே பொதாகக் காட்டும் மரபுண்டே தவிர - வைகுண்டத்தைக் காட்டும் மரபு இல்லை. வைகுண்டம் வீட்டின்பமாக (மோட்சமாக) கருதப்படுவதன்றிப் போகபூமியாகக் கருதப்படுவதில்லை. இங்கு இடம் நோக்கி சுவர்க்கம் என்பதே பொருத்தமாகப்படுகிறது. விஷ்ணுவையே குறிப்பினும் கூட சமண இலக்கியங்கள் விஷ்ணுவையே ஏற்றுக்கொள்வதன்றி தீர்த்தங்கரர்கட்கும் சிவன், திருமால் என்றே பெயர் குறிப்பிட்டுள்ளனர். திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்ற சமணநூல்களைக் காண்க. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் சமணத்துறவி என அறிஞர்கள் ஏற்பர். எனினும் அவர் கவுந்திஅடிகள் மூலம் அருகன் வணக்கம் கூறுவதோடு ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும், வேட்டுவவாயில் கொற்றவையையும், குன்றக் குரவையில் முருகனையும், பாத்திரங்கள் மூலமாகப் பரவுகிறார். இராமாயண பாரதக் கதைகளையும் குறிப்பிடுகிறார். அதனால் அவர் வைணவராகி விடுவாரா? கடவுள் வாழ்த்தாகக் கூட ஞாயிறு, திங்கள் மழை கூறியவர் அருகனைக் கூறவில்லை.

எனினும் அவர் சமணர் என்றும் கோவலன் - கண்ணகியர் சமணச்சார்புடைய சாவகர்கள் என்றும் அறிஞர்கள் ஏற்கின்றனர். ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்களும் "இளங்கோவடிகளின் சமயம் யாது?" எனும் நூலில் சிறப்பாக ஆய்ந்து நிறுவியுள்ளார். மணிமேகலை ஆசிரியர் பெளத்தர் என்பதில் ஐயமில்லை. எனினும் அவரும் தம் நூலில்

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைத்த ஞான்று,
குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறு புக்காங்கு"

என்று இராமாயணக் கதையைக் கூறுகிறார். மற்றும் பல இடங்களில் இந்திரன், திருமால் முதலிய தெய்வங்களையும் குறிப்பிட்டுள்ளார். இப்படிக் குறிப்பிட்டுள்ளதாலேயே அவர்கள், சைவ, வைணவ மதத்தினராய் விடுவரோ? அதுபோன்றே வள்ளுவரும், 'தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் உலகை உவமையாகக் காட்டியதாலேயே வைணவராகி விடமாட்டார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (1062)

என்ற குறளில் உலகியற்றியான் என்று - பாமேலழகர் - இவ்வுலகத்தைப் படைத்தவன் என்ற பொருளின் பிரம்மனைக் குறிப்பிடுவதாகக் கருதுகிறார். நையாயிகரும் வேதாந்திகளும் தற்காலச் சில (கிறிஸ்தவ, மகம்மதிய) மதங்களும் உலகைப் படைத்தவர் ஈசுவரன் (கடவுள்) என்று கூறும். புராணங்கள் பிரம்மா படைத்தார் என்று கூறும். மணக்குடவர் உரையில் இரவச்சம் எட்டாவது குறளாக முறை வைப்பில் உள்ளது. பாமேலழகர் உரையில் இது இரண்டாவது குறளாக உள்ளது. மணக்குடவர் உரையில் "துப்புரவு இல்லாக்கால் இறந்து படாதேபிறர் மாட்டு இரந்து கொண்டு உயிர்வாழ்தல் வேண்டுமாயின், உலகநடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்" என்று கூறுகிறார்.

பாமேலழகர் உரையில்

"மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும் அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கேதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்தவன்றே! அவற்றுட் சில உயிர்க்கு, இரத்தலையும் ஒரு செய் தொழிலையும் கற்பித்தானாயின் அத்தீவினையாற்றலும் அத்துன்பமுறல் வேண்டுமென்பதாம்" என்று கூறுகிறார்.

இருவருமே உலகு என்பதை மக்கள் நடைமுறையைக் கற்பித்தவன் என்று பொருள் கொண்டனர். பாமேலழகர் - முதற் குறளிலும் "உலகென்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது" என்றே கூறுகிறார்.

ஈண்டு உலகு என்பது பூமியையோ, ஞாயிறு திங்களுடன் கூடிய பிரபஞ்சத்தையோ சுட்டாமல் உலகில் வாழும் மக்களையும் அவர்களிலும் உயர்ந்த சான்றோர்களையும் உலக வழக்கத்தையுமே சுட்டி நின்றது.

இங்கு உலக அறமாகிய வழக்கியலை வகுத்தவனையே குறிப்பிடுவதாகும். அது பிரமன் - உலகையும் மக்களையும் படைத்தானேயன்றி உலக நெறியை வகுத்தவன் மனு என்பதுவே வைதீக மதக்கருத்து. சமணத்தில் ஆதிபகவனே வாழ்வியலை வகுத்தவனாவன். அவருக்கு நான்முகன் என்ற பெயரும் உண்டு. நான்கு திசைகளிலும் சமவ சரணத்தில் அறம் உரைத்தவன் என்பது பொருள். பிரம்மனுக்கும் நான்முகன் (நால்வேதமுரைத்தவன்) என்ற பெயருண்டு. இங்கு உலகியற்றியவன் பிரமன் என்பதைவிட அருகன் என்பதே பொருத்தம். கவிஞர்கள் கடவுளையும் வஞ்சப் புகழ்ச்சியாக நிந்திப்பதும் ஒரு அலங்காரமேயாகும். நாலடியார் நன்றியில் செல்வம் எனும் அதிகாரம் - ஆறாவது பாடல் இது.

"நாறாத் தகடேபோல் நன்மலர் மேற்பொற்பாவாய்
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய்
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து" நாலடி-266


பொன் போல்வராய நன்மக்களைத் துறந்து புன்மக்களைச் சேரும் திருமகளே நீ, நீறாக (சாம்பலாக) அழிவாயாக! என்பது பொருள்

"அற்ற தலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றல்
மரமனை யானுக்கிம்மானை வகுத்த
பிரமனைநான் காணப் பெறின்"

என்று பிற்காலத்து அவ்வையாரும் பிரமனை நிந்தனை செய்கிறார்.

பிரமனுக்கு முன்பு ஐந்து தலை இருந்ததென்றும் சிவன் நகத்தாற் ஒருதலை பறித்துவிட்டான் என்றும் தற்போது பிரமனுக்கு நான்கு தலை உள்ளதாகவும் உள்ள புராணக் கதையை மனத்துட்கொண்டு அவ்வையார், பிரமனைச் சபிக்கிறார். இது போலக் கவிஞர்கள் தாம் வணங்கும் கடவுளரையும் நிந்திப்பது போலக் கவிதை செய்வது மரபேயாகும். அதுபோன்றே இங்கும் வள்ளுவர் - உலக நடப்பியல் வாழ்க்கை உருவாக்கிய ஆதிபகவனையே சுட்டுகிறார் என்பதில் தவறில்லை. அல்லது பிரமனையே கூறுகிறார் என்றாலும் பிரமன் கூடச் சமண பெளத்த இலக்கியங்களில் தெய்வங்களாக ஏற்கப்பட்டுள்ளதால் வள்ளுவர் சமணச் சார்புடையவர் என்ற கருத்துக்கு ஊறுவிளைக்காது.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லாது" (377)

என்ற குறள் உரையில் வகுத்தான் என்பதற்கு தெய்வம் எனப் பொருள் கூறுவார் பாமேலழகர்.

ஈண்டு உலகியற்றியான் எனப்பட்டதற்குப் பொருள் கொண்டாற்போல வகுத்தான் என்பதற்கும் பொருள் கொள்க. பிரமன் என்றும் கொள்ளலாம் அல்லது ஊழ், தெய்வம், பால், விதி என்பன ஒரு பொருட்கிளவிகளாதலின். ஊழ் (விதி) தத்துவத்தையே தெய்வ உருவமாகப் பார்த்தல் நம் மரபாதலின் சமண மரபுக்கும் ஏற்புடையதே. படைப்பு, இருப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களாக உருவகித்தனர் என்பது தத்துவ ஞானப் பயிற்சியுடைய சான்றோர் ஏற்கும் முடிபாகும். அதன் படியே இங்கும் - இயற்கையின் படி இயங்கும் படைப்புத் தொழிலையே பிரமன் 'உலகியற்றியான், வகுத்தான்' என்று உருவகித்தனர். இது சமணர்க்கும் உடன்பாடேயாகும்.

இதுகாறும் கூறியவற்றால் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சமணமதச் சார்புடையவைதாம் என்றும் அருகரையே சுட்டும் என்றும், இந்திரன் உலகியற்றியான் (பிரமன்) அடியளந்தான், வகுத்தான், தாமரைக்கண்ணான் (திருமால்) ஆகிய வைதீகத் தெய்வங்களும் சமய சமண இலக்கியங்களிலும் ஏற்கப்பட்ட தெய்வங்கள்தாம் ஆகையால் அவற்றை எடுத்துக்காட்டாகக் கூறிய வள்ளுவர், சமணச் சார்புடையவரே என்றும் அகச் சான்று கொண்டு நிறுவினோம்.

நீலகேசி, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற புறச் சான்றுகளாலும், குறள் சமணச் சார்புடைய நூலே என்பது பெற்றாம்.

வள்ளுவர் காலத்தில் தமிழில் அறநூல்கள் படைத்தோருள் பெரும்பாலோர் சமணரே. அவருக்குப் பின்வந்த தமிழ்வளம் சேர்த்த சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை, யசோதர, காவியம், சிலம்பு முதலிய காவியங்கள் படைத்தோரும் சமணர்களே. தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதம் போன்ற இலக்கண நூல்களும் இளம் பூரணர், மணக்குடவர் போன்ற பிற்கால உரை காரர்களும், யாப்பருங்கலம், நம்பியகப்பொருள் போன்ற செய்யுள், அகப்பொருள் நூல்களும், நாலடி, பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், குறள் முதலிய நீதிநூல்களும் மற்றும் பல கலை நூல்களும் தோத்திர நூல்களும் - சிற்றிலக்கிய நூல்களும் படைத்தவர்கள் சமணச் சான்றோர் ஆவர்.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான கால கட்டத்தில் சமணர்களே சிறந்த தமிழ்த்தொண்டு புரிந்தவர்கள். வைதீக நெறியினர் தமிழகத்தில் வாழ்ந்தும் வடமொழியில் தான் நூல்கள் படைத்தளித்தனர். மகாவீரரும் புத்தரும்தாம் மக்கள் மொழியில் பிரசாரம் செய்யவேண்டுமென்று கூறியவர்கள். ஆதலால் சமண முனிவர்கள் மக்கள் மொழியாகிய தமிழிலும் கன்னடத்திலும் சிறந்த இலக்கியங்கள் படைத்தனர். தெலுங்கில் படைத்த சமண இலக்கியங்கள் இன்று கிட்டவில்லை. மல்லியரேசனர் என்பவரது செய்யுள் நூல் ஒன்று மட்டுமே பத்தாம் நூற்றாண்டில் படைத்தது கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்த்தால் அறநூல் படைத்தளித்த வள்ளுவர் சமணர் என்பதுதான் பொருந்தும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சைவ வைணவச் சான்றோர்களது தேவார, திருவாசக திவ்வியப் பிரபந்தங்கள் தோன்றின. கம்பராமாயணம் பொயபுராணம் முதலிய காவியங்கள் தோன்றின. ஆதலின் கி.பி. முதல் நூற்றாண்டினராகிய வள்ளுவர் சமணச் சார்புடையவர் என்பதில் ஐயமின்று. திருக்குறள் சமணச் சார்புடைய நூலாகச் சமணர்களால் போற்றப்பட்டு வந்தது. மணக்குடவர் உரை வரைந்தார். பின்னர் வந்த பாமேலழகர் வைதீக நெறியைப் பின்பற்றி உரை வகுத்தாலும் ஆங்காங்குச் சமணர்தம் கருத்துகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்" (359)

எனும் குறள் உரையில்

"இதனை ஆருகதர் உவர்ப்பென்ப"

என்று கூறியுள்ளார். உவர்ப்பு என்பது கஷாயமாகும்.

"அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாப்பிறப் பீனும் வித்து" (361)

எனும் குறள் உரையில்

"உற்சர்ப்பிணி அவசர்ப்பிணி எனும் கால வேறுபாட்டானும்"

எனும் சமண பாபாஷைச் சொற்களைப் பயன்படுத்துகிறார்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு (358)

எனும் குறள் உரையில்

"இதனைச் சமாதியென்றும் சுக்கிலத் தியானம் என்றும் கூறுப"

என்று சமணப் பாபாஷைச் சொற்களைப் பயன்படுத்துகிறார்.

இவற்றை நோக்கக் குறள் சமணச் சார்புடைய நூலாக இருந்ததனைப் பாமேலழகர் புலப்படுத்துகிறார் என்பதில் தவறில்லை. மேலும் மணக்குடவர் உரையையே தழுவிச் செல்கிறார். ஆதலாலும் முதலுரைகாரர் சமணராகிய மணக்குடவர் என்பதாலும் குறள் சமண நூலேயாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் கபிலர், ஒளவையார், வள்ளுவர், நக்கீரர் முதலிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த பெருஞ்சிறப்புமிக்கக் கவிஞர்களைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அதே பெயருடைய சைவ, சித்தர் மரபிலும் உள்ளவர்களாக்கிப் பல நூல்கள் உருவாகியுள்ளன.

கபிலரகவல், நக்கீரான் கைலைபாதி காளத்திபாதி, ஒளவைக்குறள், நல்வழி முதலிய நீதிநூல்கள் இதற்குச் சான்றாகும். அதுபோன்றே சித்தர் மரபிலும் ஒரு திருவள்ளுவர் காணப்படுகிறார். இவரது நூலாக "ஞானவெட்டியான்" என்ற ஒரு நூலு முண்டு இந்நூலில் அதிவீரராம பாண்டியனைப் பற்றியும் குறிப்பிடுவதால் இது பதினேழாம் நூற்றாண்டு நூலாகும். அதில் பல புனைந்துரைக் கதைகளும், மருத்துவமும் சைவ தத்துவக் கருத்துக்களும் கலந்து கிடக்கின்றன. குறள் படைத்த வள்ளுவரையும் ஞான வெட்டியான் படைத்த வள்ளுவரையும் ஒருவரே எனக் கருதும் கற்பனையாளர்களும் நம்மில் உண்டு. ஆதலால் தான் குறளாசிரியராகிய வள்ளுவர் சமணச் சார்புடைய தத்துவ ஞானி என்று நிறுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று பாரதி கூறியபடி சமணம் - வள்ளுவரைத் தந்து வான்புகழ் கொண்டது. வள்ளுவரை, இன்று உலகப் பொதுமறை தந்த உலகக் கவிஞராகவே பாவித்துப் பாராட்ட வேண்டும். குறளினை உலகப் பொதுமறையாக ஏற்றுப் போற்றுவோமாக.
 

1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com