முகப்பு வாயில்

 

சிலப்பதிகாரம்-நாடுகாண்காதை

இவ்வாறே திருக்குறள் வழிவந்த ஏனைய போலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பகவான் விருஷப தேவரை ஆதிபகவன், அறவாழிவேந்தன், எண்குணத்தான், பொறிவாயிலைந் தவித்தான், மலர்மிசை ஏகினான் எனப்போற்றி வாழ்த்துவதைக் காணலாம். கி.பி.1763-இல் வாழ்ந்த வைதிக அந்தணர் மரபைச் சார்ந்த கயாதரர் என்னும் சிவபக்தர் ஒரு பெரும் புலவர். அவர் இயற்றிய கயாதர நிகண்டில் பகவான் விருஷப தேவருடைய சிறப்புப் பெயர்களை விளக்கும் கவியில்,

'கோதில்அருகன் திகம்பர னெண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன்சோகம் அமர்ந்தோன் அறவாழியண்ணல்
சோதிமுனைவன் சினேந்திரன் பொன்னெயில் நாதன் சுத்தன்
போதிநடந் தோன்அதிசயன் சாந்த னற்புங் கவனே'

என நடுநிலையினின்றும் வழுவாது பாடியுள்ளார். இந்நிகண்டில் திருக்குறள் இறைவன் வாழ்த்துச் சிறப்புப் பெயர்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இதினின்றும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலும் திருக்குறளில் காணும் இறைவன் வாழ்த்துப் பாமேலழகர் கூறும் காணாத கடவுளைப் பற்றியதன்று எனும் உண்மை வளர்ந்திருக்கிறது. மேலும் அக்காணாக் கடவுளைப் பற்றிய தமிழர்தம் திருமறையாய் விளங்கும் திருக்குறளிலும் அதன் வழி வந்த போலக்கியங்களிலும் காணவியலாது. எனவே திருக்குறளாசிரியர் அக்கடவுளை நினைக்கவுமில்லை; ஆதிபகவன் என அழைக்கவுமில்லை என்பது வெளிப்படை அவ்வறவோரின் உள்ளக் கிடக்கையை,

'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்'

என்னும் குறட்பாவிலே விளக்கியுள்ளார். இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளை அச்சமின்றி வெறுக்கின்றார். அவ்வாறு ஒரு கடவுள் இருப்பதாக அவருக்கு நம்பிக்கையுமில்லை. காணாத முழுமுதற் கடவுளைப் பற்றிக் கூறும் பல்வேறு நூல்களும் அக்கடவுளைப் பற்பல விதமாக வருணிக்கின்றன. சிலவற்றில் கடவுளுக்குரிய பண்புகளையோ செயல்களையோ காணவியலவில்லை. எதை ஏற்பது எதைத் தள்ளுவது என்னும் ஐயம் எழுகின்றது. கடவுள் இவ்வுலகை ஏன் படைத்தார்? எங்கிருந்து படைத்தார் என்ற சாதாரண வினாக்களுக்கும் அந்நூல்களில் விடைகாணோம். ஞானமயமானவர், அன்பே வடிவானவர் எனக் கூறும் அக் கடவுள் துன்பமே நிறைந்த இவ்வுலகைப் படைக்கலாமா? மக்களிடையே வஞ்சமும், சூதும், பொய்யும், பொறாமையும், கொலையும், களவும், காமமும், தன்னலமுமே தலைவிரித்தாடும் என்பதை முன்னரே அறிந்திருக்க வேண்டாவா என்னும் வினாக்குரல் அக்குறட்பாவிலே தொனிக்கின்றது. மேலும் காணாத கடவுளைக் குறித்துப் பேசும் சமய நூல்களிலே அக்கடவுளை ஆதிபகவன், அறவாழி வேந்தன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான், பொறி வாயிலைந் தவித்தான், வேண்டுதல் வேண்டாமையிலான் என்பன போன்ற மேலான குணப்பண்புகளாலோ, மன்னுயிர்க் காற்றிய நற்பணிகளாலோ புகழ்ந்து அழைக்கவும் கண்டிலோம். எக்காரணங்கொண்டு ஆதிபகவனைக் காணவியலாத முழு முதற்கடவுளென உரைக்கின்றாரோ நாம் அறியோம்.

நமது தமிழ் மறை தந்த பெருந்தகை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறம் அறிந்து செப்பும், தேவர்; மெய்ப் பொருள் கண்ட மேதை; தேவமூடம், உலகமூடம், பாசண்டிமூடம் ஆகிய மும் மூடங்களை அகற்றிய அறிவோர்; நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்க மென்னும் மும்மணிகளை அணிந்த முனிபுங்கவர். இச்சான்றோர் மக்களைத் தவறான பாதையில் நடத்திச்சென்று மதச்சிறையில் அடைப்பவரல்லர். கல்வித் துறையிலே, அறிவு வளர்ச்சியிலே, அறவாழ்க்கையிலே, ஒழுக்க நெறியிலே, உண்மைப் பாதையிலே அழைத்துச் செல்லும் ஆர்வமுடைய அறிவர். எனவே தமிழகத்தின் தலைசிறந்த முனிவர்களும் அறிஞர்களும், அரசர்களும் வழிவழி போற்றி வந்த வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவரும், அகரமுதலாகிய எழுத்துக்களையும் ஒன்று முதலாகிய எண்களையும் தோற்றுவித்துக் கல்வியறிவை வளர்த்தவரும், அருளறத்தின் வழியில் முதல் நூல் இயற்றிய வரும், பொருளாதாரச் சமத்துவம் வளரப் பகுத்துண்டு வாழும் சமதர்மப் பண்பை வற்புறுத்தி வாழ்வுக்கு வழிகாட்டியவருமாகிய ஆதிபகவன் திருவறத்தை மேற்கொண்டார். இவ்வற நெறியே பழந்தமிழர் பண்பாடு. எனவே அப்பெருமகனை இறையாக ஏற்றுத் திருக்குறள் என்னும் பொதுமறையை இயற்றி அருளினார். இவ்வரலாற்று உண்மையை உலகுக்கு அறிவுறுத்தவே,

'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்'

எனக் கற்றோரை அழைத்துக் கல்வியறிவை முதன் முதல் அளித்த பேராசிரியராகிய ஆதிபகவனைக் குருவாக வழிபடுமாறு நினைவூட்டுகின்றார். பாம்பறியும் பாம்பின்கால் என்பது பழமொழியல்லவா? கல்வியின் பெருமையை, கல்வியின் மாண்பினை, கல்வியின் மேன்மையைக் கற்றோரே அறிவாராகையால் கற்றவர் கடமையை வற்புறுத்தியுள்ளார் நமது வள்ளுவக் கடவுள். இவ்வரலாற்றை அறிந்தே வெற்றி வேற்கை ஆசிரியர்,

'எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்'

எனக் கூறிப் போந்தார். பாமேலழகர் கூற்றுப்படி காணாத கடவுளைத் திருக்குறளாசிரியர் தொழுதிருப்பின் கற்றவரை மட்டுமல்ல, மற்றவரையும் அழைத்துக் கடவுளை வழிபடுமாறு வற்புறுத்தியிருப்பார். அது மட்டுமன்று. அறவுரைகள் பகராது பக்திமார்க்க முறைப்படி பலதோத்திரப்பாக்களைப் பாடியிருப்பார். அவ்வாறின்றி மக்கள் பலரும் ஒழுக்க நெறியிலே நிற்க வேண்டுமென்னும் இயல்பை,


'பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்'

என்னும் குறளால் வற்புறுத்தலால், பொறிவாயிலைந் தவித்தனாகிய பகவான் விருஷப தேவரையே ஆதிபகவன் எனத் திருவள்ளுவப் பெருமான் வாழ்த்தி வணங்கியுள்ளாரென்பது உறுதிப்படுகின்றது.

வைதிக சமய நூல்களில் பகவான் விருஷபதேவர்

இறுதியாக நாம் அறியவேண்டிய உண்மை ஒன்றுண்டு. அவ்வுண்மை இலக்கிய உண்மை! வரலாற்று உண்மை! மறுக்க வியலாத உண்மை. பகவான் விருஷப தேவரைப் போற்றும் வேறு பல சமய நூல்களும் இருக்கின்றன. ரிக் வேதம் 10, 12, 166-ஆம் சூத்திரங்கள், யஜுர் வேதம் அத்தியாயம் 19 மந்திரம் 14, ஸ்காந்த புராணம், அதிகாரம் 4, விஷ்ணு புராணம் அதிகாரம் 1 பக்கம் 77. பாகவதம் 5-வது ஸ்கந்தம் ஆகியவற்றில் விரிவாகக் காணலாம்.

நமது பாரதநாட்டு ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இந்தியத் தத்துவங்கள் என்னும் நூலில் (Indian Philosophy) 'பாகவதப் புராணம் பகவான் விருஷப தேவர் ஜைன தர்ம ஸ்தாபகர் என்பதை ஆமோதிக்கிறது. யஜுர் வேதம் பகவான் விருஷபநாதர், அஜிதநாதர், அரிஷ்டநேமி ஆகிய தீர்த்தங்கரர்களின் பெயர்களைக் கூறுகின்றது. வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே ஜைன தர்மம் இருந்ததென்று நான் கூறுவதில் சிறிதும் அதிசயம் இல்லை' என எழுதியுள்ளார்.

இங்கே பாகவதப் புராணத்தில் விளங்கும் பகவான் இடபதேவர் வரலாற்றுக் குறிப்பை மட்டும் காண்போம்.

* மடவரன் மேருத்தேவி வனமுலைபொருது விண்ட
தொடையலங் கோதைதாழ்ந்து துயல்வரப் பணைத்து வீங்கும்
அடல்கெழுதிணிதோள் நாபிக் காழியந் தடக்கையானே
இடப னென்றுலகமெல்லாம் ஏத்துறத்தோற்றம் செய்தான்

'மன்னிய துறவறங்கள் வழங்கியும் வங்கமாதி
உன்னிய தேயத்தூமருணர்விலாப் பெயரே போலத்
துன்னியும் உலகுளோர்க்குத் தொலைவில்பேர் வீடுசேரும்
நன்னெறி தொத்துமுத்தி நண்ணினன் இடபன் மாதோ'

* இது வடமொழி பாகவதத்தினின்றும் புலவர் திலகம் ஆரியப் புலவர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1907-ல் வெளியிடப்பெற்ற தமிழ் பாகவத புராணத்தில் உள்ளது.

இவ்விரு பாக்களாலும் பகவான் இடபதேவான் தோற்றத்தையும் அவரே முதல் முதல் உலகுக்கு நன்னெறி பயந்தவர் என்ற உண்மையையும் கலங்கரை விளக்கம் போல் காண வைத்துள்ளார் பாகவத புராணக்காரர்.

'ஜைன சித்தாந்தம் மிகப் பழமையான காலத்திலிருந்தே பரவியிருக்கிறது. 'அருகன் இதம் தயஸேவிஸ்வமயம்' என்றும், ரிஷபம் மாஸமானானாம் சபத்னானாம் விஷாசகிஹந்தானாம் சத்ருனாம் ததி விராஜ கோபிதம் சுவாம்' என்றும் ரிக், யஜுர் வேதங்களில் காணப்படும் மந்திரங்களால் அதன் தொன்மை தெளிவாகிறது' எனப் பேராசிரியர் விருபாக்ஷ எம்.ஏ. வேததீர்த்த அவர்களும் தமது அறிவு சான்ற ஆராய்ச்சி நூலில் விளக்கியுள்ளார்.

ஸ்ரீலோகமான்ய பாலகங்காதர திலகர் அவர்கள் 'யான் அறிந்தவரை சாஸ்திரங்களிலிருந்தும் வியாக்கியானங்களிலிருந்தும், ஜைன தர்மம் அனாதி காலத்தது எனத் தொய வருகின்றது. இவ்விஷயம் விவாதமற்றதாய் மதபேத மில்லாத தாய் இருக்கின்றது. வரலாற்றுப் பிரமாணங்களும் கிடைக்கின்றன' எனக் கூறியுள்ளார். மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் நிர்வாணமாக யோகத்தில் நிற்கும் சிலைகளும், ஸ்வஸ்திக் மார்க்குகளும், ஜினாயநம: எனப் பொறிக்கப்பெற்ற முத்திரைகளும் ஜைன தர்மத்தின் பழமையைக் காட்டுகின்றன எனப் பேராசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இச்சான்றுகளாலும் இப்பேரறிஞர்களின் கருத்துரைகளாலும் பண்டைக் காலவேத சாஸ்திரங்களிலேயே பகவான் விருஷபதேவர் போற்றப்பெற்றுள்ளார் என்பதை அறிந்தோம். பரத கண்டத்தில் பகவான் விருஷபதேவர் போற்றப்பெற்றது போலவே பண்டைக் காலத்தில் மேல்நாடுகளிலும் போற்றப் பெற்றார் என்ற வரலாற்றையும் ஆராய்ந்து மேலே செல்வோம்.

பேராசிரியர் டாக்டர் ஹாஜிமே நாகமுரா எழுதியுள்ள ஒரு பொய கட்டுரையில் பின்வரும் செய்திகள் காணப்படுகின்றன.

1. சீன மொழியிலுள்ள பெளத்த நூலாகிய திரிபீடகத்தில் ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவரைப் பற்றிப் பல குறிப்புகள் காணப்படுகின்றன.

2. சீன மொழியிலுள்ள ஷட் சாஸ்திரம் முதல் அத்தியாயத்தில் விருஷப தேவரைப் 'பகவத்' என அழைக்கப்பட்டுள்ளதென்றும், விருஷப தேவான் சீடர்கள் ஜைன அறநெறிகளைப் பயின்று வந்தனர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

3. சீன மொழியிலுள்ள பிடக்கிரந்தம் என்னும் ஜைன நூலில் மகாசத்திய நிர்க்கிரந்த புத்தவியாக்கியானம் என்னும் நூலும் அடங்கியிருக்கிறது. மேற்படி நூல் கி.பி. 519-ல் போதிருசி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு அதைத்திரிபீடகத்தில் சேர்த்து விட்டார். இவ்வாறு அவர் செய்ததன் நோக்கம் சைனாவிலுள்ள ஜைனர்களைப் பெளத்த மதத்தைத் தழுவும்படி செய்வதற்கே யாகும்.

4. சீனநாடு போலவே ஜப்பானியர்களும் பகவான் விருஷபதேவரை ரோக்ஷேவ் (Roke Shave) எனப்போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

5. இலங்கையிலுள்ள மகாவம்சம் என்ற நூலில் அனுராதபுரம் ஒரு ஜைனஸ்தலமாக இருந்தது. இங்குள்ள ஆதி தீர்த்தங்கரராகிய பகவான் விருஷபதேவர் கோயில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புற்று விளங்கிற்று. அதுவரை அப்பகுதியை ஆண்ட அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது என அரிய வரலாற்றுச் செய்திகளை அளித்துள்ளார்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com