முகப்பு வாயில்

 

மற்றொரு பேராசிரியர் R.G. ஹர்ஷே என்பவர் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி அறிக்கையின் பக்கம் 229-236-ல் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

1. தற்போது அலாஷயா என அழைக்கப்படும் இடத்தில் கி.மு.12-ம் நூற்றாண்டிலிருந்த ஷப் என்னும் சிலையை ஆராய்ந்தபோது, அது விருஷப தேவர் சிலையாகவே விளங்கியது. ஷப் எனில் விருஷப தேவரேயாகும்.

2. இக்கருத்தை வலியுறுத்த அந்நாட்டு மக்கள் பணிக்கர்களின் மொழியில் ஷப் என்னும் சொல்லுக்குக் கொம்புடைய பிராணி - தேவர் - எனப் பொருள் கூறப்படுகிறது. அந்த ஷப் சிலையின் கொம்புகள் எருதுகளின் கொம்புகள் போலவே இருந்தன.

3. இதனால் அந்நாட்டு மக்களாகிய பணிக்கர்கள் பகவான் விருஷபதேவரையும் அவர்தம் அறச் சின்னமாகிய எருதையும் வழிபட்டு வந்தனர் என்பது தெளிவாகிறது.

4. பணிக்கர் வகுப்பாரிடையே ஒரு பழமையான கவிதை பாடப்பட்டு வந்துள்ளது. அது ரஸஸ்மாரா என்னும் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில் பகவான் விருஷபதேவர் கர்மங்களை வென்று பாபூரண ஞானியானார் என்றும் பின்பு ஒவ்வொரு நகரம், கிராமமாகச் சென்று தர்மோபதேசம் செய்து வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்கால வெளிநாட்டுப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகளில் கீழ்வரும் செய்திகள் காணப்படுகின்றன.

சோவியத் அல்மேனியாவின் காமர்ப்யூலா (சிகப்பு மலை) 'தேஷேன்வி' என்று கூறும் உரதியம் நகரம் இருக்கிறது. பேபிலோனியாவின் 'இஸ்பேசூர் என்னும் நகரம் ரிஷப்பூர் என்றதன் திரிபேயாகும். அங்கே தேஷப் தேவான் (ரிஷப்) சிலையும் இருந்திருக்கிறது. பழைய காலத்தில் 'தேஷவ்' அல்லது தேஷப் ரூபத்தில் பகவான் விருஷப தேவர் மகிமை மத்திய ஆசியாவிலிருந்து சோவியத் நாடு வரை பரவியிருந்தது.

மவாதியா, ஜின்னேரவி, இஸ்பெக்ஜுர் முதலிய இடங்களில் தேஷப் தேவான் (ரிஷப் தேவர்) சிலைகள் காணப்படுகின்றன. அச்சிலைகள் நிர்வாண நிலையில் எருதைச் சின்னமாகக் கொண்டு விளங்குகின்றன. அவருக்கு ஆயுதம் திரிசூலம் போன்று காணப்படுகிறது. (இது இரத்தினத் திரயத்தைக் குறிக்கும்)*

* இவைகள் Voice Ahimsa என்ற இதழில் வந்தவை.

இவ்வாறு இவ்வுலக வரலாற்றில் மிகப் பழங்கால முதலே பகவான் விருஷப தேவர் இடம் பெற்றிருந்தார் என்ற உண்மையையும் அறிந்தோம்.

அப்பெருமானே தலைவர் தம் தலைவர்க்கும் தலைவராய், அறிவர் தம் அறிவர்க்கும் அறிவராய், முனைவர் தம் முனைவர்க்கும் முனைவராய், புலவர்தம் புலவர்க்கும் புலவராய், இறைவர்தம் இறைவர்க்கும் இறைவராய் விளங்குகின்றாரென்னும் வரலாற்றையும் கண்டோம். இவ்வரலாற்று முதல் அறிவனையே கடவுள் என உலகமெலாம் போற்றியது. இப்பெருமான் அருளிய அருளறத்தை மக்களனைவரும் மேற்கொண்டு வாழ்ந்தனர். பின்னரே பல பிரிவுகள் ஏற்பட்டன. அவை யாவும் சமயம், மதம் என்ற பெயரால் வகுக்கப்பட்டன. இவைகளில் சைவமும் வைணமும் பகவான் விருஷப தேவரையே வெவ்வேறு உருவங்களாலும் வெவ்வேறு பெயர்களாலும் வெவ்வேறு கதைகளாலும் கற்பனை செய்துகொண்டன.

சமயங்களின் தோற்றம்

இவ்வுண்மையை ஆராய நமக்குப் பொறுமைவேண்டும். நாம் மேற்கொண்டுள்ள சமயக் கொள்கைகளை மறந்திருக்கவேண்டும். நேர்மை வேண்டும். நுண்ணிதின் ஆராய்தல் வேண்டும். அப்பொழுது தான் உண்மை புலனாகும்.

பகவான் விருஷப தேவரை விஷ்ணு புராணம் போற்றுகின்றது. பாகவத புராணம் மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று என அவரை ஒப்புக்கொள்ளுகின்றது. உலகுக்கு அஹிம்ஸா தருமத்தைப் போதிக்கவே மஹாவிஷ்ணு, பகவான் விருஷபதேவராக அவதாத்தாரெனவும் பொறித்திருக்கின்றது. இக்கருத்தைத் திறந்த உள்ளத்தில் பதிய வைக்கவேண்டும். இவ்வாறே ஸ்காந்த புராணமும் சிவபுராணமும் பகவான் விருஷப தேவரைப் போற்றுகின்றன. மேலும் பகவான் விருஷப தேவர் நிலையையும் சிவ பெருமான் நிலையையும் ஒப்பிட்டுக் காண்பார்க்கு இவ்வொற்றுமை ஒருவாறு புலனாகும்.

பகவான் விருஷப தேவர் தவமியற்றி வீடுபேறு பெற்ற இடம் கைலாயமலை. சிவபெருமான் இருக்கையும் கைலாயம். பகவான் விருஷபதேவருக்குச் சின்னம் விருஷபம். சிவபெருமானுக்கு வாகனம் விருஷபம். பகவான் விருஷபதேவர் ஆலமரத்தின் கீழிருந்து அறமுரைத்தார். சிவபெருமான் தக்ஷணாமூர்த்தமும் ஆலமரத்து அடி பகவான் விருஷபதேவர் பல மாதங்கள் தொடர்ந்து தவத்தில் நின்றார். அதனால் சடை வளர்ந்தது. சிவபெருமான் சடையை வளர்க்கின்றார். பகவான் விருஷபதேவர் வினைகளாகிய அவுணரைத் துரத்த நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளாகிய ஆயுதங்களைத் தாங்கினார். சிவபெருமான் தம்மை எதிர்த்த அவுணரை அழிக்க மும்முனைகளைக் கொண்ட சூலாயுதத்தை ஏந்தினார். பகவான் விருஷபதேவர் ஐம்புல அடக்கத்தால் காமனை வென்றார். சிவபெருமான் கோபங்கொண்டு காமனை எரித்தார். பகவான் விருஷபதேவர் கடையிலா ஞானம் (வாலறிவு) பெற்றமையால் அவ்வறிவனை மூன்று கண் முனித்தலைவன் எனப் போற்றினர். சிவபெருமான் மூன்று கண்களை உடையவர். பகவான் விருஷபதேவர் அடைந்த கேவலஞான நிலையைக் கண்டு கேவலக் கிழத்தியைப் பிரியாத ஒரு பாகன் எனப் புலவர்கள் போற்றினர். இங்கே சிவபெருமான் பார்வதியைத் தமது உடலிற் பாதியாகக் கொண்டுள்ளார். பகவான் விருஷபதேவர் பண்டைய இலக்கியங்களில் சிவன், சிவகதிநாயகன், சிவகதிக்கிறைவன் எனப் போற்றப் பெற்றுள்ளார். சிவம் எனில் மங்கலம் அல்லது தூய்மை எனப் பொருள்படும். இப்பெயர் ருத்திர மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு ஏற்றப்பட்டுள்ளது. பகவான் விருஷபதேவர் வீடுபேறு பெற்ற திருநாள் சிவராத்திரி என வழங்கப்படுகிறது. இங்குச் சைவசமயத்திலே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் விருஷப தேவர் அருளிய அறத்தின் வழி நின்ற முனிவர்களில் பலர் கனக நந்தி, விஜயநந்தி, பவணந்தி, தருமநந்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளனர். சைவ சமயத்திலே விருஷப வாகனத்தை நந்தி என அழைக்கின்றனர். பகவான் விருஷபதேவரைக் கைலாசநாதரெனவும், அப்பெருமான் அமைந்துள்ள கோயில்களைக் கைலாசநாதர் கோயில் எனவும் வழங்குகின்ற இலக்கியங்களும், கல்வெட்டுச் செய்திகளும், எங்கும் காணப்படுகின்றன.

சிவபெருமானுக்கும் அவ்வாறே வழங்கப்படுகின்றது. எனவே நாம் முன்னர் கூறியது போன்று பிற்கால மாறுதல்களால் பகவான் விருஷபதேவர் தவநிலை கொண்ட சிலைகள் இல்லற நிலையாகக் காட்சியளிக்கின்றன. அறத்தின் சின்னம் படைக்கலன்களாயின. அறவாழி கொலையாழியாகச் சுழல்கிறது. அருளுருவம் அக்கினிச் சட்டியாலும் மண்டையோடுகளாலும் பயங்கரத் தோற்றமாயின. அறம் அறம் எனப் பேசிய பொதுநெறி, சமயம் சமயம் எனும் குறுகிய நிலையை எய்தியது. இப்பிளவுகள் வடக்கே உதித்துத் தெற்கே வந்து சேர்ந்தன. இச் சைவ சமயக் கொள்கைகள் காபாலிகம், காளா முகம், பாசுபதம் போன்ற உட்சமயங்களுடன் தமிழகத்தின் பிற்காலத் தமிழ் நூல்களில் இடம் பெற்றன. இப்பிரிவுகளை அறிய,

'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி'

என்னும் தேவர் திருமொழியின் வழிநின்றாலன்றி உண்மை காணவியலாது. மதமோ சமயமோ நம்மோடு உடன் பிறந்தவை அல்ல என்னும் இயற்கையை உணர்ந்து இவ்வாராய்ச்சியில் நுழையும் அறிஞர்களுக்கு விழிப்பும் வியப்பும் உண்டாகும். பகவான் விருஷபதேவான் அருளறமும், கல்வி முறையும், சமுதாய சகோதர அமைப்புமே நமது பழந்தமிழான் பண்பாடாக விளங்கின என்னும் உண்மையைக் காண்பார்கள். இவ்வரலாற்றைத் துருவித்துருவி ஆராய்ந்தவர் நமது தமிழகத் தனிப் பெருந் தலைவர் தமிழ்ப் பொயார் திரு. வி.க. அவர்களாவார்கள். அப்பொயார் தமது வாழ்க்கையில் மூன்று பிறவிகள் எடுத்துள்ளார்கள். அவர்தம் ஆரம்பகாலம் சமயக் கொள்கையில் ஆர்வமும் அறிவும் பெற்று விளங்கியது. இடையில் அரசியலில் ஈடுபட்டார். இவ்விரண்டாம் பிறவி மக்கள், நாடு, சமரசம் என்னும் பொது நோக்கின் வழிச் சென்றது. அவர் வாழ்க்கையின் மூன்றாம் பிறவி மாண்புடையது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காணும் துணிவு பெற்றார். அத்துறையில் மேதையும் ஆனார். சமரச சன்மார்க்கத்திலும் எல்லாச் சமய ஆராய்ச்சியிலும் ஆர்வங்கொண்டு ஆராய்ந்தார். தொழிலாளர் வாழ்க்கையின் வீழ்ச்சியைக் கண்டு கண்ணீர் வடித்தார். இவைகள் யாவும் இறைவன் செயலா? என எண்ணி எண்ணி ஏங்கினார். அரசியல் கோளாறும் சமுதாய சுயநலமுமே இதன் காரணம் என அறிந்தார். திருக்குறளிலே ஆழ்ந்தார். திருக்குறள் ஆசிரியர் வாழ்த்தும் ஆதிபகவனை அடைக்கலம் புகுந்தார். தமது சமரச கொள்கைக்கு அரண் செய்வது ஆதிபகவன் அருளிய திருவறமே எனத் தெளிந்தார். அடங்கா மகிழ்ச்சிக் கொண்டார். பகவான் விருஷபதேவர், காரல்மார்க்ஸ், லெனின், மகாத்மா காந்தியடிகள், வினோபாபாவே ஆகிய மாபெருந்தலைவர்கள் அவர்தம் அகக்கண் எதிரே காட்சியளித்தனர். வணக்கம் செலுத்தினர். பகவான் விருஷபதேவர் அருளிய நல்லறத்திலே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பேரறம் நமது திரு.வி.க. அவர்களின் உயிர் கலந்து உளங்கலந்து ஊன் கலந்து சென்றது. உள்ளம் பூரித்தார். மதக்கொள்கைகளை மனத்தகத்தே துறந்தார். பண்டைய காலம் போலவே நமது தமிழகத்தில் அன்பொளி வீசிப்பண்பு வளர வேண்டுமென விழைந்தார். அன்பும் சகோதர உணர்ச்சியும் மக்கள் வாழ்க்கையில் மலர்வதைத் தடை செய்யும் மதக்கோட்பாடுகளைக் காய்ந்தார். தாம் கண்ட உண்மைகளை உலகுக்கு உணர்த்தத் துணிந்தார். 'அருகன் அருகே அல்லது விடுதலை வழி' எனவும், 'பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்' எனவும் இருபெரும் நூல்களை இயற்றி அருளினார். அப்பொயாரின் மூன்றாம் பிறவியில் மலர்ந்த அறிவு மலர்கள் அவை. மக்கள் வாழ்க்கை நலத்தை ஓம்புதற்குரிய அறிவும் அறமும் நிறைந்தவை அத்தூய கலைமலர்கள், அம்மலர்களிலே வீசும் மணம் பலதிறப்பட்டவை. வரலாற்றுண்மைகள், அறவுரைகள், பொதுவுடைமைக் கொள்கைகள், ஒழுக்க நெறிகள் ஆகிய நன்மணங்கள் வீசுகின்றன. அம் மணங்களில் சிலவற்றைத் துய்த்து எம்மாளைப் போற்றி இன்புறுவோம்.

'ஆதி பகவன் சோதி நாதன்
விருஷப தேவன் புருஷ நாயகன்
அவனே இறைவன் அவனே ஈசன்
அவனே மாயன் அவனே நான்முகன்
அவனே சித்தன் அவனே அருட்சினன்
அவனே தர்மம் அவனே அகிம்சை
அவனே அருகன் அருகே அணைந்தால்
விடுதலை வழியைக் கடிதில் பெறலாம்
அவனை எண்ணுவம் அவனை வாழ்த்துவம்
அவன்பணி ஆற்றுவம் அவன் நெறி ஓம்புவம் :

ஜைனம் எது?

அந்நெறி எதுவோ? செந்தண் ஜைனம்
ஜைனம் ஒருமதச் சார்பின தன்று
ஜைனம் எதுவெனச் சாற்றுவன் இங்கே
ஐம்புலன் வெல்லும் செம்மை ஜைனம்
ஒழுக்கம் காக்கும் விழுப்பம் ஜைனம்
கொலைகள் ஒழிக்கும் நிலைபெறல் ஜைனம்
கள்பொய் காமம் தள்ளல் ஜைனம்
ஊணுண் ணாத மேனிலை ஜைனம்
வெறிஆவேசம் முறியிடம் ஜைனம்
சாந்த அமுதம் மாந்தல் ஜைனம்
நல்லெணம் நன்மொழி நற்பணி ஜைனம்
பிறர்க்கென வாழும் திறத்துறை ஜைனம்
தேவை அளவை மேவல் ஜைனம்
அகிம்சா தர்மம் அனைத்தும் ஜைனம்
இந்த ஜைனம் எந்த மாதமோ?
மக்கட் குரிய தக்க பொதுமை

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com