முகப்பு வாயில்

 

அறவோர்

அகிம்சை அருளா அறவோர் இல்லை
புத்தர் சோக்ரதர் உத்தமக் கிறிஸ்து
வள்ளுவர் வசுவர் தெள்ளியல் மூலர்
தாயு மானவர் நேயச் சாந்த
லிங்கர் இராம லிங்க அடிகள்
தால்ஸ்தாய் காந்தி சால்பின ரெல்லாம்
அகிம்சா தர்மம் அருளியே சென்றனர்
அன்னவர் போதனை பின்னை நாளில்
விதவித மான மதமத மாயது!
என்னே பிளவு! என்னே உலகம்!
அகிம்சா ஜைனம் அகன்ற ஜைனம்
அகண்ட ஜைனம் அகில மாக
வேண்டுவம் என்றும் வேண்டுவம் நாமே;
- அருகன் அருகே-234-271 வாகள்

பொருளும் சீலமும்

வாழ்வு வளரச் சூழ்பொருள் தேவை
பொருளை வெறுத்தல் மருளின் மயக்காம்
பொருட்கலைப் பயிற்சி பொதுள எங்கும்:
முதல்-தொழில் வேற்றுமை உதய மாகக்
காலம் பொருளால் சீலம் நிலைத்தது;
முதல்-தொழில் வேற்றுமை மோதுமிக் காலம்
பொருளால் சீலம் சுருளு கின்றது;
ஒருபால் பெருகி மறுபால் அருகும்
பொருள்தரும் அல்லலில் பொரியும் சீலமும்:
சீலம் வாழ்வின் சீவ நாடி
நாடி விழுந்தால் வாடும் வாழ்வே:
உடைமையும் அல்லல் இன்மையும் அல்லல்
இரண்டும் சீலம் சுரண்டும் யமனாம்;
உடைமையும் வேண்டா இன்மையும் வேண்டா
வேறு வழியென்? தேறுதல் வேண்டும்:

மார்க்கிஸ்-காந்தி-அருகன்

மார்க்கிஸ் முனிவன் மார்க்கம் கண்டனன்
அந்த மார்க்கம் யாக்கை போன்றது:
ஆவி நல்க மேவினன் காந்தி:
மார்க்கிஸ் காந்தி மார்க்க மூலம்
யாதென் றுலகம் ஒது கின்றது?
ஆதி அருகன் ஓதினன் மூலம்:
அகிம்சை மேலாம் அறமென முதல்முதல்
அருளிய பெருமை அருகனுக் குண்டே
அகிம்சை உயிர்ப்பை அளித்த ஐயன்
சீலப் போர்வையும் சால அமைந்தனன்
சீலம் வளர்வழி கோலினன்: அதுவே
மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம்:
- பொருளும் அருளும்-பொருள்-(50-76) வாகள்

ஆதிபகவன் வாழ்த்து

1. கன்று காலனைக் கடந்தாய்
காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று முத்தளைத் துறந்தாய்
தோற்ற மாக்கட லிறத்தாய்
ஒன்ற நோய்பகை ஒருங்கே
உடைந்து வெங்களத் துதிர்
வென்றி ருந்தனை நீயே
வீரர்தம் வீரர்க்கும் வீரா.

2. சாதல் நோய்சரை பிறவி
தாம்செய் தீவினைக் கடலுள்
மாது யருழந்து றுநோய்
மறுகும் மன்னுயிர்க் கெல்லாம்
தீதுஇல் நன்னெறி பயந்து
திரைசெய் நீள்கரை ஒருவிப்
போதரும் புணை படைத்தாய்
புலவர்தம் புலவர்க்கும் புலவா.

3. அரிய ஆயின செய்திட்டு
அமரர் துந்துபி அறைந்து
புரிய பூமழை பொழியப்
பொன்னெயில் மண்டிலம் புதைந்த
விரிகொள் தண்தளிர்ப் பிண்டி
மரநிழல் இருந்(து) இருவினையும்
பிரியும் பெற்றியை உரைத்தாய்
பொயவர்ப் பொயவர்ப் பொயாய்.

4. பொங்கு சாமரை ஏந்திப்
புடைபுடை இயக்கர்நின் றிரட்டச்
சிங்க ஆசனத் திருந்து
தெளிந்தொளி மண்டிலம் நிழற்ற
திங்கள் முக்குடை கவிப்பத்
தேவர்தம் திருந்தவை தெருள
அங்க பூவமதறைந்தாய்
அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா.

5. ஊறி யாவதும் உணரா
உறல்வகை இதுவென உரைத்தி
கூறுவேன் எனக் கூறாய்
குரல்முர சனையதோர் குணத்தைச்
சேறல் உள்ளமும் இலையாய்த்
திருமலர் மிசைஅடி இடுதி
தேறு மாறென்னை நின்னைத்
தேவர்தம் தேவர்க்குந் தேவா.

6. கண்ணினால் ஒன்றுங் காணாய்
காணவும் உளபொருள் ஒருங்கே
பெண்ணும் அல்லவும் சாராய்
பிரிதலில் போன்பம் உடையை
உண்ணல் யாவதும் இலையாய்
ஒளிதிகழ் உருவமது உனதால்
எண்ணில் யார்நினை உணர்வார்
இறைவர்தம் இறைவர்க்கும் இறைவா.

7. சொற்றி யாவதுங் கேளாய்
சுதநயம் துணிவுமங் குரைத்தி
சுற்றி யாவதும் இலையாய்க்
கடையில்பல் பொருளுணர் உடையை
பற்றி யாவதும் இலையாய்ப்
பரந்தவெண் செல்வமும் உடையை
முற்ற யார்நினை உணர்வார்
முனைவர்தம் முனைவர்க்கும் முனைவா.

8. அன்மை யாரவர் தாம்தாம்
அறிந்தன உரைத்தபொய் யாக்கி
நின்மெயாகிய ஞான
நிகழ்ச்சி நீவிரித்(து) உரைத்த
சொன்மை யாரிடை தொந்தார்
தொடர்வினை முழுவதும் சுடும்நின்
தன்மை யார்பிறர் அறிவார்
தலைவர்தம் தலைவர்க்கும் தலைவா.
- நீலகேசி

திருவறம் வளர்க!


நாயனார் கோயில்
(ஜீவபந்து ஸ்ரீபால்)


சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலைப் பலரும் நன்கு அறிவர். அக்கோயிலைத் திருவள்ளுவர் கோயில் என இன்று அழைக்கப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நயினார் கோயில் என்றே வழங்கி வந்தது.

வரலாற்றின் வழியில் ஆராயும்போது அக்கோயில் தோன்றிய காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை நாயனார் கோவில் என வழங்கி வந்துள்ளது. நாயனார் எனில் நாயகன், தலைவன் எனப் பொருள்படும். நாயனார் என்ற இச்சொல் முதன் முதல் ஜைன சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர்களுக்கும் ஜைன முனிவர்களுக்கும் பட்டப் பெயராகத் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தின் ஆரம்பத்தில்

'திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடை கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதை தர்ழபிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி'

என்னும் அருகன் வாழ்த்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அறிவன் கோயில் என்பதற்கு நாயனார் கோவில் என உரை எழுதியுள்ளார். இது போன்றே கழுகுமலையிலுள்ள கல்வெட்டுச் செய்திகளில் ஜைன முனிவர்களைப் பற்றிய குறிப்புகளில் நாயனார் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. திருவதிகையில் கிடைத்த கல்வெட்டுக்களில் ஜைனக்கோயிலை நால்முக நாயனார் கோயில் என்றும், முனைதீச்சுரம் உடைய நாயனார் என்றும் காணப்படுகிறது. திருப்பாதிக் குன்றத்துக் கோயில் கல்வெட்டுச் செய்தியில் அக்கோயில் தீர்த்தங்கரரை நாயனார் என்றே பொறிக்கப்பெற்றுள்ளது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதார் தமது உரையில் அவிநாயனார் என்னும் ஜைன அறவோரை அறிமுகப்படுத்தி உள்ளதைப் புலவர் உலகம் நன்கு அறியும். சில பண்டைய கல்வெட்டுச் செய்திகளில் தீர்த்தங்கரர்களையும், முனிவர்களையும் நயினார் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம் தாலுக்காவிலுள்ள கோலியனூர் ஜைனக் கோயில் ஒன்றில் ஸ்வஸ்தி ஸ்ரீநயினார் தேவர் பெருமானார் ஸ்ரீகோவில் என்றும், கோலியாபுரநல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் என்றும் காணப்படுகின்றன. இவ்வரலாற்றில் அடிப்படையிலேயே திருக்குறளாசிரியருக்கும் நாயனார் என்றும், தேவர் என்றும் பட்டங்கள் அமைந்துள்ளன. தேவர் என்ற பட்டத்தைப் பற்றிய வரலாறு பலருக்கும் நன்கு தொயும். ஜைன சமயத்தைத் தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரருக்கு விருஷப தேவர் (இடப தேவர்) எனப் பட்டம் வழங்கி வந்துள்ளது போன்று ஜைன முனிவர்கள் பலருக்கும் தேவர் பட்டம் விரவி வந்துள்ளதைக் காணலாம். எனவே நாயனார், தேவர் என்ற பட்டங்கள் முதல் முதல் ஜைன தீர்த்தங்கரர்களுக்கும் முனிவர்களுக்கும் வழங்கி வந்துள்ளன என்பதை அறிகின்றோம்.

* இக்கட்டுரை ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காவது ஆண்டு மலால் வெளிவந்தது.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com