முகப்பு வாயில்

 


நடு நின்றாராயும் நல்லார்
உயர்திரு. மயிலை-சீனி. வேங்கடசாமி அவர்களின்
அணிந்துரை


நாலடியார், சமண சமய முனிவர் இயற்றிய சமண சமய நூல் என்பதைத் தொன்று தொட்டு எல்லோரும் அறிவர். இக்காலத்து, நாலடியாரை நன்கு அறியாத சிலர், அது ஆசீவகமத நூல் என்று கூறத் துணிந்தனர். இவ்வாறு மனம்போனபடி எல்லாம் எழுதுவது 'ஆராய்ச்சி' என்று சிலர் கருதுகின்றார்கள். இவர்களுடைய தவறுகளையறியாத பாமர மக்கள் இவர்கள் எழுதுவதை உண்மை என்று நம்பிவிடுகின்றனர். அவ்வாறு மயங்காமல், உண்மையை உணர்த்துவதற்கும் போலி ஆராய்ச்சியை மறுப்பதற்கும் ஜீவபந்து - T.S. ஸ்ரீபால் அவர்கள் இச்சிறு ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கிறார்கள். இதில், நாலடியார் ஆசீவகமத நூல் அன்று; ஜைன சமய நூலே என்பதைத தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்கள். திரு. T.S. ஸ்ரீபால் அவர்கள் கூறும் காரணங்களும் ஆதாரங்களும் எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க உண்மைகளாகும்.

சென்னை
1-10-58

சீனி. வேங்கடசாமி.


சமர்ப்பணம்

நமது மதிப்புக்குக்காய பொயாரும் முன்னாள் டிப்டி கலெக்டருமாகிய வீடூர்-உயர்திரு. S. விருஷபதாஸ் ஜெயின் அவர்களின் அருமை இளைய குமாரர் மணி என்னும் செல்வப்பெயரைக் கொண்ட திரு. V. லக்ஷமிவிஜயன், B.A., (Hons.) அவர்கள் உள்ளங்கவர்ந்த ஓர் இளைஞர். நான் நமது மாபெருந் தலைவர் ராவ்பகதூர் A. சக்கரவர்த்தி நயினார் M.A., I.E.S. (Rtd.) அவர்களைக் காணச் செல்லும் போதெல்லாம் திரு. மணி அவர்கள் தமது கல்லூரியில் ஜெயின சமயத்தைப் பற்றி ஆசிரியர்கள் கூறும் சிறப்புரைகளை என்னிடம் கூறி மகிழ்வார். குறிப்பாக நாலடியாரையும் திருக்குறளையும் பற்றிய ஆசிரியர்களின் கருத்துரைகளைப் பாராட்டியும் அவர்களின் நேர்மைக்கு நன்றி செலுத்தியும் என்னையும் அவர்தம் தாத்தாவாகிய பேராசிரியரையும் மகிழ்ச்சியிலாழ்த்துவார். இவ்விளைஞான் சமயப்பற்றும் அறிவின் திறனும் எதிர் காலத்தில் நமது நாட்டிற்கும் ஜைன சமயத்திற்கும் உறு துணையாயிருக்குமென எண்ணி யான் பூரிப்பதுண்டு. நமது பேராசிரியான் வாரிசாக விளங்குவாரென்றும் எண்ணி மகிழ்வேன். எனது எண்ணத்திற்கு எதிராகி விட்டது. காலனின் செயல். பிணிகளாகிய படைகளைக்கொண்டு உயிர்களைப் பறிக்கும் பாழுங்கூற்றுவன் இக்காலத்தில் மோட்டார்களையும், வான ஊர்திகளையும் பயன்படுத்த முனைந்துவிட்டான்.

எனது அன்பிற்கலந்த திரு. மணி அவர்கள் திடீரெனக் கார் விபத்துக்குள்ளாகி நம்மையெல்லாம் விட்டு மறைந்தார். அவர்தம் மறைவு நமது சமயத்திற்கும் நாட்டிற்கும் பெருத்த நஷ்டமாகும். இத்தகைய அறிவு சான்ற இளைஞான் நினைவு என்றும் நமது உள்ளத்தில் நின்று நிலவ இந்நூலினைத் திரு. மணி அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

சென்னை
1-9-58

இங்ஙனம்,
T.S.ஸ்ரீபால்


திருவறம் வளர்க

ஜைன முனிவர்கள் இயற்றிய நாலடியார்
கடவுள் வாழ்த்தில் காணும்
வானவில் ஆராய்ச்சி

நாலடியார் வரலாறு

நாலடியாரைப் பற்றி வழங்கும் வரலாற்றைப் பலரும் நன்கறிவர். ஒரு காலத்தில் நமது தமிழகத்தில் ஒரு பாகத்தில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாக எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாண்டிய நாட்டை அடைந்தார்கள். பாண்டியன் அம்முனிவர்களை ஆதாத்து வந்தான். பஞ்சம் நீங்கியதும் அவர்கள் தங்கள் இருப்பிடங்களில் ஒவ்வொரு ஏட்டில் ஒவ்வொரு வெண்பாவை எழுதி வைத்து, அரசர் அறியாவண்ணம் அவ்வூரை விட்டுச் சென்றனர். மன்னன் அம்முனிவர்களின் பிரிவாற்றாமையால், அவ்வேடுகளை வையை யாற்றில் விட்டுவிடும்படி ஏவினான். அவைகளில் நானூறு ஏடுகள் நீரை எதிர்த்துச் சென்றன. அது கண்டு வியப்புற்ற மன்னன் அந்நானூறு ஏடுகளை எடுக்கச்செய்து, அவற்றின்கண் அமைந்திருந்த பாடல்களைப் படிக்கச் செய்தான் என்பதே அவ்வரலாறு. இதற்குச் சான்றாகப் பல வெண்பாக்களும், பாயிரங்களும் இதுவரை வெளிவந்துள்ள பல நாலடியார் நூல்களிலும் கண்டுள்ளோம்.

பாண்டிய மன்னனுக்குப் பின்னர் பதுமனார் என்பவர் நாலடியாரை அதிகாரங்களாக வகுத்து, கடவுள் வாழ்த்தும், உரையும் எழுதினார் என்பதும் தொன்று தொட்டு வழங்கிவரும் செய்தியாகும். நாலடியாருக்கு உரை எழுதிய பிற்கால உரையாசிரியர்கள் பலரும் பதுமனார் உரையைத் தழுவி எழுதியதாகவே குறித்துள்ளார்கள். ஆனால் பதுமனார் உரையை யாரும் வெளியிடவில்லை. அண்மையில் தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீட்டாரால் வெளியிடப்பட்ட நாலடியார் உரை வளம் என்னும் நூலில் பதுமனார் உரை வந்திருக்கிறது. பதுமனார் கடவுள் வாழ்த்து பதுமனாரால் இயற்றப்பட்டதல்ல என்பது புலனாகும். அவ்வுரையை அறிஞர் உலகுக்கும் அறிமுகம் செய்வது இன்றியமையாத தாகும்.

அவ்வுண்மையைக் காண்போம்.

பதுமனாரும் கடவுள் வாழ்த்தும்

"வானிடு வில்லின் வரவறியா வாய்மையாற்
கானிலந் தோயாக் கடவுளை-யாநிலஞ்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் முள்ளத்து
முன்னியவை முடிக வென்று"

பதுமனார் உரை :

"வானிடு வில்லின் வரவு போன்றிருந்த வரவினையறிந்து, கானிலந் தோயாக்கடவுளையாம் நிலத்தில் சென்னியுற வாய்மையால் வணங்கிச் சேர்து மெம்மனத்து நினைத்தன முடிவனவாக என்றவாறு.

இதற்கிவ்வாறன்றிப் பிற வாற்றானும் பொருளுரைப்பாருமுளர். வானிலே தோற்றப்படா நின்ற வில்லினது வரவு போன்ற பிறப்பியல்பை மெய்மையாக வறிந்து, பூவின்மேல் வந்தருளு மிறைவனை யாஞ் சென்னியாலே உற வணங்கிச் சேர்து மென்றது நினைந்தன முடிவனவாக வென்றவாறு.

பிறப்பியல்பிற்கு முற்றுவம மாதலால் வானிடு வில்லுவமமாயிற்று. வரவு ஈண்டியல்பு. அறியாவெனவே அறிந்ததென்பதாயிற்று. வாய்மையாலென்றது இறைவனை வணங்குவாற்குப் பொய்யா வாய்மையாற் படுவதின்மையிற் பிறப்பியல்பை மெய்யாக வறிந்தென்பதாம். கானிலந் தோயாக்கடவுளை யென்பது கடவுளரோ டொத்தள வினரன்றி யொத்தாரும் மிக்காரு மில்லாத விறைவற்குக் கானிலந் தோயப்படாமையும் பொதுவாகிய இயல்பொன்றையுமே யிவர்க்குக் கூறும் பான்மையல்லாமையும் பூவின்மேல் வந்தருளுமிறைவனென்பது கருத்து. யாநிலஞ் சென்னியுற வணங்கிச் சேர்துமென்றது வணக்கங்கள் பலவாதலின் வண்மையாற் சமய வணக்கத்தியல்பு தோன்ற யாம் நிலத்திலேயுற வணங்கிச் சேர்து மென்றார்."

இங்கே "இதற்கிவ்வாறன்றிப் பிறவாற்றானும் பொருளுரைப்பாருமுளர்" என்பதால் பதுமனாருக்கு முந்தியே இக்கடவுள் வாழ்த்தும் அதற்குரிய வேறு உரைகளும் வழக்கில் வந்துள்ளன என்பதும், அவ்வுரைகளில் "வானிலே தோற்றப்படும் வில்லினது வரவு போன்ற பிறப்பியல்பின் மெய்ம்மையை அறிந்து பூவின்மேல் வந்தருளும் இறைவனை" என விளக்கப்பட்டிருந்தன வென்பதும் பதுமனாரால் வெளியாகிறது.

மேலும் பதுமனார் தமது உரையினும் பழைய உரையே சாலச் சிறந்ததெனக் கொண்டு அதற்கு விளக்கமான விரிவுரையும் எழுதியுள்ளார். பிற்கால உரையாசிர்கள் பலரும் பதுமனாருக்கு முற்பட்டதும், அவரால் சிறப்பிக்கப்பெற்றதுமான உரையையே பின்பற்றி நாளிது வரை உரை எழுதிவருகின்றனர். இவ்வுண்மைகளை அறியாத திரு. தி.நா. சுப்பிரமணியவர்கள் நாலடியாரின் கடவுள் வாழ்த்து பதுமனாரால் இயற்றப்பட்டதெனும் வழக்கைக்கொண்டு அதற்கு தான் ஒரு புத்துரை கண்டுள்ளார் அமுதசுரபியிலே. ("வானத்தில் தோன்றும் இந்திர வில்போல் இன்னவாறு வந்தனன் என்று அறியாமல் தோன்றுவான் என்பதை உணர்ந்து எம் உள்ளதத்தில் நினைத்தவை முடிய வேண்டுமென்று நினைத்துப் பூமியில் பாதம் படியாத முழுமுதற் கடவுளை நாம் பூமியில் தலை பொருந்த வணங்கி அடைவோம்.") இவ்வுரையால் திரு. தி.நா.சு.வின் போக்கு நன்கு விளங்குகிறது. பதுமனார் எழுதிய உரையையும் தழுவாமல் அவர் சிறப்பித்துக் கூறும் உரைகளையும் பாராமல், தனது எண்ணத்தை நிலைநாட்டத் தன் மனம்போன போக்கில் ஒரு கற்பனை உரையை எழுதிக்கொண்டார். இவ்வாறு கூறும் இயல்பைத் தன்னகத்தே கொண்ட திரு. தி.நா.சு. தனது வானவில் கட்டுரை முழுமையும் மாற்றிக் கூறும் அடிப்படையிலேயே சென்றிருக்கிறார். பாம்பறியும் பாம்பின் கால் என்னும் பழமொழிப்படி அவர்தம் கட்டுரையை வாசிக்கும் அறிஞர்கள் அவர் போக்கை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com